பெப்சி வேலைநிறுத்தத்தில் திடீர் திருப்பம்: ஆர்.கே.செல்வமணி முக்கிய அறிவிப்பு
- IndiaGlitz, [Thursday,August 03 2017]
தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி அமைப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சனை இருந்து வரும் நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் பெப்சி தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் காலா, மெர்சல் உள்பட பல படங்களின் படப்பிடிப்பு பாதிப்பு அடைந்தது. மேலும் மூத்த கலைஞர்களான ரஜினி, கமல் இந்த பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தினர்
இந்த நிலையில் நாளை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் இருதரப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாகவும், நாளை முதல் பெப்சி சம்மேளனத்தைச் சேர்ந்த 23 அமைப்புகளும் பணிக்குத் திரும்புவார்கள் என்றும் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சில பிரச்சினைகளால் படப்பிடிப்புகள் 3 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் பெப்சி தொழிலாளர்களோடு பணியாற்ற மாட்டோம், தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்தது மற்றும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட சம்பளத்தைக் குறைத்து தான் கொடுப்போம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு 3 நாட்களாக பல்வேறு திரைப்படங்கள் பாதிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக தொழிலாளர் ஆணையரை நேரடியாக சந்தித்து இதற்கு ஒரு நல்ல முடிவு காண வேண்டும் என கோரிக்கை வைத்தோம். நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறோம் என அரசாங்கம் உறுதிமொழி அளித்துள்ளார்கள். மேலும், இப்பிரச்சினைப் பேசி தீர்த்து வைக்கிறோம் என்று அரசாங்கத்தின் தரப்பிலிருந்து உத்திரவாதம் அளித்துள்ளார்கள். அப்பேச்சுவார்த்தையில் பெப்சி அமைப்பினர், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு தரப்பு பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளார்கள்.
ரஜினி சார் மற்றும் கமல் சார் போன்ற மூத்த கலைஞர்களும் எங்களுடைய முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். நிறைய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பல தயாரிப்பாளர்கள் எங்களிடம் வேண்டுகோள் வைக்கிறார்கள். பழைய சம்பளத்தின் அடிப்படையில் பணியாற்றவும் தயார் என உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்கள்.
திரைப்படத்துறையின் பல அமைப்புகளும், பல்வேறு துறையினரும் வேண்டுகோள் வைத்த அடிப்படையில் நாளை முதல் பணிக்குச் செல்வது என முடிவெடுத்திருக்கிறோம். பெப்சி சம்மேளனத்தைச் சேர்ந்த 23 அமைப்புகளும் நாளை முதல் பணிக்குத் திரும்புவார்கள். முதலில் தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டேன் என்று தெரிவித்தார்கள். நாளை அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவதால் மட்டுமே பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளோம்.
நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் எங்களது தரப்பிலிருந்து எந்தவித நிபந்தனையும் வைக்க விரும்பவில்லை. எங்களை பிளவுப்படுத்தாதீர்கள் என்று மட்டுமே சொல்கிறோம்.