தேர்தல் தோல்வி பயம்...ஜாதிப்பாகுபாடு....! அநியாயமாக கொலையுண்ட 2 இளைஞர்கள்...!
- IndiaGlitz, [Thursday,April 08 2021]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், அநியாயமாக இரு இளைஞர்கள் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் என்ற கிராமத்திற்கு அருகில் சோகனுர் என்ற ஊர் உள்ளது. இந்த கிராமத்தை சார்ந்த 4 இளைஞர்கள் குருவராஜப்பேட்டையில் உள்ள டீ கடையில் அமர்ந்திருந்தனர். அப்போது பக்கத்து ஊரான பெருமாள் ராஜப்பேட்டையைச் சார்ந்த இளைஞர்கள் அங்கு வந்ததில், இருபிரிவினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தல் குறித்தும், சாதி குறித்தும் பேசியதில் மோதல் முற்றியுள்ளது.
அர்ஜுனன், சூர்யா, மதன், சௌந்தர் உள்ளிட்ட இளைஞர்கள் பெருமாள்ராஜபேட்டை அருகில் சென்று கொண்டிருக்கும் போது, அந்த ஊரைச்சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் கல்,கட்டை, கம்பு,கத்தி வைத்து அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். அரசியல் கட்சி பிரமுகரின் மகனும் இச்செயலில் ஈடுபட்டுள்ளான்.
இத்தகவல்கள் குறித்து அறிந்த சோகனுர் மக்கள் அங்கு சென்று, காயமடைந்த அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தீவிர சிகிச்சையில் இருந்த இளம் வயதினரான அர்ஜுன்(23),சூர்யா (24) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அர்ஜுனுக்கு திருமணமாகி 10 நாட்களே ஆகியுள்ளது, சூர்யாவுக்கும் திருமணமாகி மனைவியும்,குழந்தையும் இருந்துள்ளனர். இச்சோக சம்பவத்தை தொடர்ந்து தேவாலயப்பகுதியில், நேற்று இரவில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் சோகனுர் கிராம மக்கள். இதையடுத்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய காவல் துறையினர் கூட்டத்தை கலைத்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து வேடல், குருவராஜப்பேட்டை, பெருமாள்ராஜப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு, பிரச்சனையை தவிர்க்க 50 காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இது குறித்து காவல்துறையினர் 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,சோகனூரில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் ஜாதிவெறியர்கள் இந்தச் செயலைச் செய்துள்ளனர். இது தொடர்பாக பா.ம.கவைச் சேர்ந்தவர்களையும் மணல் மாஃபியா கும்பலையும் கைதுசெய்ய வேண்டும். ஏப்ரல் 10ஆம் தேதி மாவட்டத் தலைமையகத்தில் இந்தத் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.