தந்தை வெற்றி பெற்ற உற்சாகத்தில் மகன் மரணம்: உள்ளாட்சி தேர்தல் சோகம்!
- IndiaGlitz, [Thursday,January 02 2020]
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. மாலை 6 மணி நிலவரப்படி மாவட்ட கவுன்சிலர் பதவியில் அதிமுக 121 இடங்களிலும் திமுக 155 இடங்கள் முன்னணியில் உள்ளது. அதேபோல் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 669 இடங்களிலும் திமுக 835 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பல சுவாரஸ்யங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு சோகமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
திருப்பூர், பொள்ளிகாளிபாளையம் கிராம பஞ்சாயத்து 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுப்பிரமணியம் என்பவர் போட்டியிட்டார். இவர் சற்றுமுன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தனது தந்தை வெற்றி பெற்றதை அவரது 21 வயது மகன் கார்த்தி என்பவர் வெற்றியை தனது நண்பர்களுடன் சந்தோஷமாக கொண்டாடியபோது உற்சாக மிகுதியால் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றும், சுப்பிரமணியம் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.