2 வயதில் கடத்தப்பட்ட மகன்… 24 வருடமாகத் தேடி அலையும் ஒரு தந்தையின் பாசப் போராட்டம்!
- IndiaGlitz, [Thursday,July 15 2021]
சீனாவில் 2 வயதில் கடத்தப்பட்ட தனது மகனை 24 வருடமாகப் பல இடங்களில் தேடி, கடைசியில் கண்டுபிடித்து இருக்கிறார் ஒரு தந்தை. அந்தத் தந்தையின் பாசப் போராட்ட வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பூகம்பம், நிலநடுக்கம் போன்ற பெரும் அசம்பாவிதங்களுக்கு இடையே காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பல வெளிநாடுகளில் அதற்கென தனி அமைப்புகள் இருக்கின்றன. அப்படியொரு அமைப்பின் மூலம் 2 வயதில் கடத்தப்பட்ட தனது மகனைக் கண்டுபிடித்து இருக்கிறார் குவா கேங்டாங் எனும் தந்தை.
சீனாவில் கடந்த 1997 ஆம் ஆண்டு ஷாண்டோங் எனும் மாணத்தில் உள்ள தனது வீட்டிற்கு முன்பு ஜின்ஷேன் எனும் 2 வயது குழந்தை விளையாடி கொண்டு இருந்தது. அந்தக் குழந்தை திடீரென காணாமல் போய் இருக்கிறது. இதனால் தனது குழந்தையின் புகைப்படத்தை தனது வண்டியில் கட்டிக்கொண்டு தேட துவங்கி இருக்கிறார் குவோ கேங்டாங். இப்படி அலைந்தபோது அவருக்கு பல தடவை விபத்து ஏற்பட்டு, கால் எலும்பு முறிவு சம்பவங்களும் நடைபெற்று இருக்கிறது.
ஆனாலும் தேடுவதை நிறுத்தாத குவோ தனது வாழ்நாளில் தன்னுடைய மகனைக் கண்டுபிடித்தே தீர வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறார். இதற்காக பைக்கிலேயே மாதக் கணக்கில் சுற்றி இருக்கிறார். இதுவரை 5 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ததாக கூறியுள்ள குவோ இதுவரை 10 பைக்குகளை வாங்கியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். 24 வருடமாக ஓயாத போராட்டம் இறுதியில் ஒரு வழியாக முற்றுப்பெற்று இருக்கிறது.
சீன பாதுகாப்பு நலவாரியத்தின் உதவியுடன் குவோ தனது டிஎன்ஏவை வைத்து தனது மகன் மத்திய சீனாவில் இருப்பதைக் கண்டுபிடித்து உள்ளார். தனது மகனை 24 வருடம் கழித்து பார்த்த குவோ கேங்டாங் அவரை கட்டி அணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.