காருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு!!!

  • IndiaGlitz, [Saturday,October 24 2020]

 

ஆந்திர மாநிலத்தில் ஆற்றைக் கடக்க முயன்ற கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரில் பயணம் செய்த பெரியவர்கள் அனைவரும் உயிர் தப்பிய நிலையில் 15 வயது சிறுமி ஒருவர் காரில் மாட்டிக் கொண்டதால் அவரின் தந்தை சிறுமியைக் காப்பாற்ற முயன்று அவரும் உயிரிழந்து இருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த பிரதாப்(45) அவரது மனைவி சியாமளா (35) மகள் சாய் வினிதா (15) பிரதாப்பின் தம்பி சின்னப்பா (30) மற்றும் கார் டிரைவர் கிரண்குமார் ஆகியோர் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு திரும்பிய போது வழியில் சித்தூர் மாவட்டம் பெனமூர் அடுத்த கொண்டாயகரி பல்லே எனும் இடத்தில் ஆற்றைக் கடக்க முயன்று இருக்கின்றனர்.

அப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயணம் செய்த கார் வெள்ளத்தில் அடித்து சென்றிருக்கிறது. இந்நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்து டிரைவர் கிரண்குமார், பிரதாப்பின் மனைவி சியாமளா, பிரதாப்பின் தம்பி சின்னப்பா ஆகியோர் கதவைத் திறந்துகொண்டு வெள்ளத்தில் குதித்து இருக்கின்றனர். இதைப் பார்த்த உள்ளூர் பொதுமக்கள் ஆற்றில் விழுந்தவர்களை மீட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் காரில் இருந்த 15 வயது சிறுமி சாய் வினிதா காரில் இருந்து குதிக்க முடியாமல் திணறி இருக்கிறார். அவருக்கு உதவி செய்த அவருடைய அப்பாவும் அதே காரில் மாட்டிக்கொண்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது பிரதாப்பையும் அவருடைய மகள் சாய் வினிதாவையும் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.