பாஸ்டேக் இல்லாவிட்டால்… நள்ளிரவில் அமலுக்கு வரும் புது அறிவிப்பு!
- IndiaGlitz, [Monday,February 15 2021]
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என்ற விதிமுறையை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சமீபத்தில் கொண்டு வந்தது. அந்த வகையில் பாஸ்டேக் வாங்குவதை கட்டாயப்படுத்த தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதனால் இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் இல்லாமல் சுங்கச் சாவடிகளை தாண்டி செல்லும் வாகனங்களுக்கு முன்பு இருந்ததை விட 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய நெருஞ்சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் சுங்கச் சாவடிகளுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கப் பட்டது. இதை செயல்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் இருந்து கொண்டே வந்தன. இதனால் தொடர்ந்து விதிமுறைகளில் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என்ற விதியை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமலுக்கு கொண்டு வர இருக்கிறது. இதன்படி பாஸ்டேக் எடுக்காமல் நேரடியாகப் பணத்தை செலுத்த நினைக்கும் வாகன ஓட்டிகள் முன்பு இருந்ததை விட இரு மடங்கு பணத்தை செலுத்த வேண்டி வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.