விவசாயிகளுக்கு ஆதரவாக டிவிட்… இளம்பெண் சமூக செயற்பாட்டாளர் கைது!
- IndiaGlitz, [Tuesday,February 16 2021]
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறுமாறு டெல்லியில் விவசாயிகள் கடந்த 82 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு சமூக ஆர்வலர்களும், பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் வெளிநாட்டு பிரபலங்கள் யாரும் இந்திய விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று இந்திய பிரபலங்கள் பலரும் பதிலடி கொடுத்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது.
அந்த வகையில் இளம் வயது சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க், பாடகி ரஹானா, மற்றும் கவர்ச்சி நடிகை மியா கலிபா போன்றோருக்கும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கிரெட்டா துன்பர்க் வெளியிட்ட டிவிட்டர் பதிவை திருத்தி விவசாயிகளுக்கு ஆதரவாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி நேற்று கைது செய்யப்பட்டு உள்ளார்.
22 வயதான திஷா ரவியை தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ததோடு பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து டெல்லி சைபர் க்ரைம் போலிஸார் கைது செய்து உள்ளனர். மேலும் டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் திஷா ஆஜர்படுத்தப்பட்டு 5 நாட்கள் போலீஸ் காவலுக்கும் உட்படுத்தப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் விவசாயிகள் விஷயத்தில் ஆதரவு தெரிவிக்கும் அனைவரையும் மத்திய அரசு அச்சுறுத்தி வருவதாகவும் விமர்சனம் எழுந்து உள்ளது. மேலும் இது அடக்குமுறையின் உச்சம் என்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.