பயிர்க்கடன் தள்ளுபடி- முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!
- IndiaGlitz, [Tuesday,February 09 2021]
தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்கடன் 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு சங்கங்களின் பிரநிதிகள் தற்போது சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து உள்ளனர்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ரங்கநாதன், பயிர்க்கடன் ரத்து செய்யப் பட்டதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இது மறக்க முடியாத நிகழ்வு என்றும் இந்தியாவிலேயே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் விவசாயிகளுக்கு அதிகளவு செய்துள்ளார் என்றும் கூறியுள்ளனர்.
அதேபோல தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் எங்களின் கோரிக்கையை ஏற்று நிதி நெருக்கடியிலும் முதலமைச்சர் தொடர்ந்து நிவாரணங்கள் வழங்கினார் எனத் தெரிவித்தார். மேலும் தமிழக முதல்வர் விவசாயிகளுக்காக கொரோனாவிற்கு மத்தியிலும் நிதி நெருக்கடி நிலையை பொருட்படுத்தாமல் 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ளது பாராட்டுக்குரியது என்று நன்றி பாராட்டினார்.