கமல்ஹாசனுக்கு விவசாயிகள் கொடுத்த சிறப்பு பரிசு
- IndiaGlitz, [Wednesday,June 06 2018]
நடிகரும் அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு காவிரி பிரச்சனை தீர்ந்த பின்னர் கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஒருசிலர் விமர்சனம் செய்தாலும் இந்த முயற்சியை ரஜினிகாந்த் உள்பட பலரும் பாராட்டியுள்ளனர்.
அந்த வகையில் இன்று அய்யாக்கண்ணு உள்பட அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கமல்ஹாசனை சந்தித்து அவருக்கு நினைவுப்பரிசு வழங்கினர். அவர்கள் கமல்ஹாசனுக்கு வீரவாள் மற்றும் கலப்பையை பரிசாக அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், 'காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகள், தமிழக விவசாயிகள் கலந்து பேசினால் அரசியல்வாதிகள் நுழைய முடியாது. என்னை யார் என்று பலர் கேட்கின்றனர்; அவர்களுக்கான பதில் ஏழரை கோடி மக்களில் ஒருவன் நான் என்று கூறினார்
மேலும் விவசாயிகளுக்கு யார் நல்லது செய்தாலும், இருகரம் கூப்பி வரவேற்போம் என்றும், கர்நாடக முதல்வருடன் கமல்ஹாசன் சந்திப்பு முன்னேற்றமே; பின்னடைவு அல்ல என்றும் விவசாயிகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் கமல்ஹாசனுக்கு எங்களுடன் எங்களுக்காக உழைக்கும் கலப்பையை பரிசாக வழங்குகிறோம் விவசாயிகளின் பிரதிநிதிகளில் ஒருவரான தெய்வசிகாமணி தெரிவித்தார்.