டிராக்டரை ஜப்தி செய்த வங்கி அதிகாரிகள்: விவசாயி தற்கொலை
- IndiaGlitz, [Thursday,September 07 2017]
ஆயிரக்கணக்கான கோடி வங்கியில் கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி கட்டாமல் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒருசில ஆயிரங்கள் வங்கி கடன் கட்டாத விவசாயி ஒருவரின் டிராக்டரை வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரிநாதன் என்ற விவசாயி அப்பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் டிராக்டர் வாங்குவதற்காக கடன் வாங்கியுள்ளார்.
மழையில்லாமை, வறட்சி காரணமாக அவர் சில மாதங்களாக முறையாக தவணை கட்டவில்லை என தெரிகிறது. உடனே வங்கி அதிகாரிகள் வெள்ளியங்கிரிநாதனின் டிராக்டரை ஜப்தி செய்துள்ளனர்.
இது குறித்து அவர் காவல்துறையில் புகார் செய்ய முயன்றபோது அவரது மனுவை காவல்துறையினர் பெற மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் பூச்சிகொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதிலும் சிகிச்சையின் பலனின்றி வெள்ளியங்கிரிநாதன் பரிதாபமாக மரணம் அடைந்தார். டிராக்டரை ஜப்தி செய்த வங்கி அதிகாரிகள் மீதும், புகாரை பெற மறுத்த காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.