தமிழகத்தை நோக்கி வரும் புயலின் பெயர்: ரெட் அலர்ட் அறிவிப்பு
- IndiaGlitz, [Thursday,April 25 2019]
இந்தியப்பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி வரும் 29 அல்லது 30ம் தேதி தமிழக கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஃபனி என்ற உருது சொல்லுக்கு ஆபத்து அல்லது பயங்கரம் என்பது பொருள். பெயரிலேயே ஆபத்து இருப்பதால் இந்த புயல் பயங்கரமாக இருக்கும் என கருதப்படுகிறது
இந்த புயல் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் அறிவித்துள்ளார். சென்னைக்கு 1500 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏப்ரல் 27, 28-ஆம் தேதி புயலாக மாறி வடதமிழகத்தில் கரையை கடக்கும் என்றும் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே வரும் 27, 28 ஆகிய தேதிகளில் மிக கனமழை வட தமிழகத்தில் வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.