ஒடிஷாவை உருக்குலைய செய்ய காத்திருக்கும் ஃபானி புயல்!
- IndiaGlitz, [Friday,May 03 2019]
வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் அதிதீவிரமடைந்து தற்போது ஒடிஷாவை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் ஒடிஷாவில் இந்த புயல் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் புயலால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்க தேசிய பேரிடர் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
இன்று பிற்பகல் சுமார் 200 கிமீ வேகத்தில் ஒடிஷாவின் பூரி பகுதியில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது பயங்கர காற்றும் கனமழையும் பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயலின்போது கடலோர பகுதியில் 170 முதல் 200 கிமீ வேகம் வரை காற்று வீசும் என்றும் குறிப்பாக கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர், கேந்த்ப்டா ஆகிய பகுதிகளில் மிககனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இந்த பகுதியில் உள்ள சுமார் 11 லட்சம்பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலோர பகுதிகளில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் எழுபது உயரதிகாரிகள் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். 18 மாநிலத்தில் இருந்து பேரிடர் மீட்புக்குழுக்களும், 525 தீயணணப்புத்துறை குழுக்களும் தயார் நிலையில் உள்ளனர். இந்த புயலால் ஒரு உயிர் கூட சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே தங்களது குறிக்கோள் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.