முதல்வரிடம் பாராட்டு வாங்கிய பிரபல புகைப்பட கலைஞர்....! வேலையில்லாமல் தவிக்கும் நிலை....!
- IndiaGlitz, [Wednesday,August 18 2021]
தமிழகத்தில் பிரபலமான புகைப்பட கலைஞரான ஜாக்சன் ஹெர்பி அவர்களை, அரசு நிகழ்ச்சிகளில் அதிகாரிகள் பணி செய்யவிடாமல் தடுப்பதாக வீடியோ ஒன்றை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
கன்னியகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் தான் ஜாக்சன் ஹெர்பி. இவர் தினசரி பத்திரிக்கை ஒன்றில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். இவர் வேலம்மாள் பாட்டியை புகைப்படம் எடுத்ததன் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார். கொரோனா நிவாரண நிதியாக அரசு சார்பில் 2 ஆயிரம் பணமும், மளிகைபெருட்கள் அடங்கிய தொகுப்பும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இதை வாங்கிய வேலம்மாள் பாட்டியின் முகத்தில் அளவில்லாத மகிழ்ச்சி இருந்திருந்தது. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற தலைப்பின் கீழ், இப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.
ஜாக்சன் இதுபோன்று பல பிரச்சனைகளில் துணிச்சலாக புகைப்படம் எடுத்தவர். குறிப்பாக குமரி மாவட்டத்தை ஒக்கி புயல் தாக்கியபோது, பிரதமர் மோடி பார்வையிட வந்திருந்தார். அப்போது பாதிப்பின் தீவிரத்தை விளக்க பல புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஜாக்சன் எடுத்த புகைப்படங்கள் அதிகளவில் இடம்பெற, பரவலாகவும் பேசப்பட்டது.
அந்தவகையில் கொரோனா சமயத்தில், அந்த தொற்றால் இறந்தவர்களை மயானத்தில் எப்படி எரிக்கிறார்கள் என்பதை விளக்க இவர் எடுத்த புகைப்படம் பெரிதளவில் பேசப்பட்டது. இதேபோல் கொரோனா நோயாளிகளுக்கு எப்படி பரிசோதனை செய்யப்படுகிறது, எப்படி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை, கோவிட் வார்டுக்குள் சென்று இவர் எடுத்த புகைப்படங்கள் தெளிவாக விளக்கியிருந்தன.
இந்நிலையில் தான் வேலையில்லாமல் இருப்பதாக வருத்தம் தெரிவித்த ஜாக்சன், வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழக முதல்வருக்கு என்னுடைய வணக்கத்தை கூறுகிறேன். வேலம்மாள் பாட்டியை புகைப்படம் எடுத்த ஜாக்சன் ஹெர்பி பேசுகிறேன். குமரி மாவட்டத்தில் தினப்பத்திரிக்கையில் வேலை பார்க்கும் பொழுது தான் வேலம்மாள் பாட்டியை புகைப்படம் எடுத்திருந்தேன். இதைப்போலவே பல முக்கியமான விஷயங்கள் குறித்து நான் புகைப்படங்கள் எடுத்துள்ளேன். ஆனால் பாட்டி புகைப்படம் வைரலான நிலையில், குமரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் நான் புகைப்படம் எடுக்க கூடாது என, மாவட்ட செய்தி துறை சார்பில் எனக்கு தொடர்ந்து அழுத்தம் தரப்படுகிறது. மேலும் என்னை பணியிலிருந்து நீக்கி விட்டார்கள். எனக்கு பத்திரிகை துறையில் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டும், நிறைய சாதிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் என்னை வேலை செய்யவிடமால் தடுக்கிறார்கள் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.