கணவரின் உயிருக்காக அதிகாரி காலில் விழுந்து கதறும் பெண்… நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

  • IndiaGlitz, [Wednesday,April 28 2021]

இந்தியா முழுக்கவே கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தால் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை போன்ற பல்வேறு நெருக்கடிகள் நிலவி வருகின்றன. ஆனால் இதுகுறித்து அந்தந்த மாநில சுகாதார அமைச்சகம் கூறும்போது போதுமான படுக்கை வசதி இருப்பதாகவும் அதேபோல ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதாகவும் கூறிவருகின்றன.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் நொய்டாவில் உள்ள கொரோனா கேர் சென்டர் ஒன்றில் ஒரு பெண் தனது கணவரின் உயிருக்காக தலைமை மருத்துவ அதிகாரியின் காலில் விழுந்து கதறும் காட்சி தற்போது பல ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. அதுவும் அந்தப் பெண் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவும் ரெம்டெசிவிர் மருந்தைக் கேட்டு கதறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நொய்டாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தலைமை மருத்துவ அதிகாரியைச் சந்தித்து உறவினர்கள் பலரும் கதறி அழும் காட்சி தற்போது பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நிர்வாகத்தில் உள்ள மருந்தகத்திற்கு முன்பு தினமும் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் பல மணிநேரம் வரிசையில் நிற்கும் காட்சியும் அரங்கேறி வருகிறது. அதோடு 1500 ரூபாய் உள்ள இந்த மருந்து தற்போது கள்ளச் சந்தையில் 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப் படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு உதவும் இந்த ரெம்டெசிவிர் மருந்து தீவிரக் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இந்தியா முழுக்கவே தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தாண்டி கொரோனா சிகிச்சைக்கு உதவும் ரெம்டெசிவிர் மருந்தின் தட்டுப்பாடும் தற்போது தலைத் தூக்கத் துவங்கியுள்ளது.