போலி இ-பாஸ் தயாரிப்பு: தலைமைச்செயலக ஊழியர் உள்பட 5 பேர் கைது
- IndiaGlitz, [Wednesday,June 24 2020]
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பயணம் செய்ய வேண்டுமானால் இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இ-பாஸ் பெற அரசு அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இணையதளம் மூலம் இ-பாஸ் பெறுவதில் நடைமுறை சிக்கல் இருப்பதாலும் காலதாமதம் ஆவதாலும், ஒரு சிலர் போலி இ-பாஸ் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு சிலர் போலி இ-பாஸ் அடித்து விநியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் போலி இ-பாஸ் தயாரிப்பில் சென்னை மாநகராட்சி ஊழியர், தலைமைச் செயலக ஊழியர் உள்பட 5 பேர் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தலைமைச் செயலகம் ஊழியர் ஒருவர், சென்னை மாநகராட்சி ஊழியர் ஒருவர், மாவட்ட ஆட்சியர் ஊழியர் ஒருவர் உள்பட 5 பேர் இணைந்து போலி இ-பாஸ் தயாரித்து விநியோகம் செய்து வந்ததாகவும், இவர்கள் ஒரு இ-பாஸ்க்கு ரூ.3000 முதல் 5000 வரை பெற்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது இதனையடுத்து போலீசார் இந்த ஐந்து பேர்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தலைமை செயலக ஊழியர் உட்பட அரசு அலுவலகத்தில் பணி பணிபுரிபவர்களே போலி இ-பாஸ் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளதாக வந்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.