யூடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்துவந்த போலி மருத்துவர்!
- IndiaGlitz, [Saturday,March 27 2021]
தெலுங்கானா மாநிலத்தில் பிஎஸ்சி டிகிரி மட்டுமே படித்த ஒருவர் நகர்ப்பகுதியில் மருத்துவமனை தொடங்கி அதில் பல பெண்களுக்கு மறைமுகமாக கருக்கலைப்பு செய்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இவர் யூடியூப் மற்றும் வீடியோக்களை மட்டுமே பார்த்து கருக்கலைப்பு செய்ய கற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளனர்.
வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஹன்மகொண்டா எனும் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திரா ரெட்டி (38) எனும் நபர் புதிதாக மருத்துவமனை துவங்கியுள்ளார். மேலும் இந்த மருத்துவமனைக்கு உள்ளூரில் படித்த சில நர்ஸ்களையும் சட்டீஸ்கர் பகுதியைச் சார்ந்த சில பெண்களையும் வேலைக்கு அமர்த்தி உள்ளார். இந்தப் பெண்களைக் கொண்டு சட்ட முறைகேடாக கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்பும் பெண்களை ஈர்த்து பல சிக்கலான கருக்கலைப்பு ஆப்ரேஷன்களையும் செய்து வந்துள்ளார்.
மேலும் இவருக்கு உரிய படிப்பறிவு இல்லாததால் யூடியூப் மற்றும் சில வீடியோக்களை பார்த்து இந்திரா ரெட்டி கருக்கலைப்பு செய்யக் கற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியச் சட்டத்தின் படி கருக்கலைப்பு செய்வது அவசியமான மருத்துவக் காரணங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முறைகேடான வகையில் கருக்கலைப்பு நடப்பதைக் கேள்வியுற்ற போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது ஒரு பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்து கொண்டு இருந்த இந்திரா ரெட்டி அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் சிகிச்சைப் பெற்றுக் கொண்டு இருந்த அந்த பெண்ணை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.