கோவையில் 3-ஆம் அலை...! வாட்ஸ்-அப் வதந்தியால் அலறும் மக்கள்.....!
- IndiaGlitz, [Friday,June 11 2021]
கோவை மாவட்டத்தில் மூன்றாம் அலை துவங்கி விட்டதாக, பொய்யான செய்தி வாட்ஸ்-அப்பில் பரவியதால், மக்கள் பீதியில் உள்ளனர்.
கோவை மாவட்டத்தில், கொரோனா குறித்த வதந்தியான தகவல்களை வாட்ஸ்அப்-ல் பரப்பினால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் குமார வேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.
கோவை, நஞ்சுண்டாபுரம் பகுதியில் கொரோனா 3-ஆவது அலை துவங்கியதாகவும், உருமாறிய கொரோனா பரவியுள்ளதாகவும் செய்திகள் வாட்ஸ்-அப்-ல் வலம் வந்த வண்ணம் இருந்தன. அப்பகுதியில் 965 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்த்ததில், சுமார் 680 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது. புதிய வகை நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலை கோவையிலிருந்து துவங்குகிறது. உஷாராக இருக்க வேண்டும்” என்ற பொய்செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது தவறான தகவல் என்று அறிந்தும், பலர் குழுக்களிலும், தனியாகவும் அனைவருக்கும் ஷேர் செய்து வந்துள்ளனர். இதையடுத்து இந்த இக்கட்டான சூழலில், இதுபோன்ற தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கோவை மாவட்ட ஆணையர் கூறியுள்ளார். இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் விஷமிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நஞ்சுண்டாபுரம் பகுதியில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட 650 மாதிரிகளில், சென்ற 10 நாட்களில் 56 நபர்களுக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, அங்குள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் மாநகராட்சி பணியாளர்கள் சென்று, கொரோனா இருப்போரை கண்டறிந்து மருத்துவ வசதிகளை செய்து தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.