"5 வருடம் முன் இருந்த பொருளாதார பேரழிவை நாங்கள் தான் சரி செய்திருக்கிறோம்"..! பிரதமர் மோடி.
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லியில் நடைபெறும் அசோசம் (ASSOCHAM - Associated Chambers of Commerce and Industry of India) அமைப்பின் 100-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அப்போது பேசிய பிரதமர், ``5-6 ஆண்டுகளுக்கு முன்பு நமது பொருளாதாரம் பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அதை பா.ஜ.க அரசு நிலைநிறுத்தியது மட்டுமல்லாமல் பொருளாதாரச் சீரமைப்பைக் கொண்டுவந்தது. பல ஆண்டுகளாகத் தொழில்துறையில் உள்ள பழைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.இந்தியாவில் உள்ள பெரும்பாலான துறைகளை முறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சியை நவீனமாகவும் சீராக்குவதன் மூலமும் முன்னேறி வருகிறோம். 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை அடைவது கானல் நீரல்ல.வரும் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வரி செலுத்துபவர்களுக்கும் வருமான வரித்துறையினருக்கும் இடையே எந்த மனிதத் தலையீடும் இருக்காது. இந்த நடைமுறை நாம் எடுத்துள்ள மற்றொரு வரலாற்று முடிவு. இது சிலருக்கு நல்ல நடவடிக்கையாகவும் சிலருக்குத் தொந்தரவாகவும் இருக்கும். ஏனெனில் அனைத்தும் இயந்திரமயமாக்கப்பட்டு வெளிப்படையானதாக அமைக்கப்படவுள்ளது.
2014-ம் ஆண்டுக்கு முன்னால் இந்தியாவின் வங்கித்துறை எவ்வளவு பலவீனமாக இருந்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அந்த இழப்புகளை ஈடுசெய்ய ஆறு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பொருளாதாரத்தை வலுப்படுத்த எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும் கேள்விக்குள்ளாக்குவது சிலரின் தேசிய கடமையாகிவிட்டது.தோல்விகளைக் குறைகளாகக் கருத முடியாது. அவ்வாறு நினைத்தால் சவால்களை எதிர்கொள்ளும் கலாசாரத்தையுடைய நாட்டை ஒருபோதும் உருவாக்க முடியாது. இந்த விழாவின் மூலம் நாட்டின் வங்கியுடன் தொடர்புடைய மக்களுக்கும் கார்ப்பரேட் உலக மக்களுக்கும் நான் ஓர் உறுதியை அளிக்க விரும்புகிறேன்.நம் நாட்டின் பழைய பலவீனங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. எனவே, உங்கள் தொழிலில் தைரியமாக முடிவெடுங்கள், வெளிப்படையாக முதலீடு செய்யுங்கள், சுதந்திரமாகச் செலவழித்து முன்னேறுங்கள். நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் அதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து வெளியேறி முன்பைவிட இன்னும் அதிக பலத்துடன் செயல்படும் திறன் நம் நாட்டிடம் உள்ளது. வரும் ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடியை முதலீடு செய்யவுள்ளோம். கிராமப்புற உள்கட்டமைப்புகளுக்காக ரூ.25 லட்சம் கோடியை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளோம். நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடிநீரை உறுதி செய்ய ரூபாய் 3.5 லட்சம் கோடியை நாங்கள் ஒதுக்கியுள்ளோம்.
நம் இலக்கான 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை உருவாக்குவது ஒருநாள் சாத்தியப்படும். இதற்கு முன்னர் முடியாது என்றிருந்த பல விஷயங்களை நம் நாடு முடித்துக்காட்டியுள்ளது” எனப் பேசியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
arul sudha
Contact at support@indiaglitz.com