கூகுள், ஆண்ட்ராய்டுலாம் வேணாம்.. நாங்களே ஒரு OS செய்யப் போறோம்..! Facebook அதிரடி.
- IndiaGlitz, [Friday,December 20 2019]
சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் தனக்கென ப்ரேத்யேக இயங்குதளம் ஒன்றை உருவாக்கி வருகிறது. எதிர்காலத்திலும் கூகுளின் ஆண்ட்ராய்டை மட்டும் சார்ந்திருக்காமல் இருக்க இந்த புதிய இயங்குதளத்தை உருவாக்கி வருகிறது. இந்தப் பணியின் தலைமை பொறுப்பை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான மார்க் லுகாவ்ஸ்கி ஏற்றுக்கொண்டுள்ளார். இவர் Windows NT இயங்குதளத்தை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றினார்.
இந்த இயங்குதளம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய தகவல்கள் ஒன்றும் பெரிதாகக் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது ஃபேஸ்புக்கின் ஆகுளஸ் மற்றும் போர்டல் சாதனங்கள் ஆண்ட்ராய்டின் உதவியுடன்தான் இயங்குகின்றன. இதுகுறித்து ஃபேஸ்புக்கின் AR மற்றும் VR துறையின் தலைவர்களுள் ஒருவரான ஃபிகஸ் கிர்க்பாட்ரிக் கூறுகையில் ''எதிர்காலத்தில் ஃபேஸ்புக்கின் ஹார்ட்வேர் கூகுளின் மென்பொருளை சார்ந்திருப்பதற்கான தேவை ஏற்படாது. இதனால் ஃபேஸ்புக்கின் ஹார்ட்வேர் மீது கூகுளிற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இருக்காது என்றார்.
மேலும், இதுபற்றி ஃபேஸ்புக்கின் ஹார்ட்வேர் துறையின் தலைவர் ஆண்ட்ரூ பாஸ்வோர்த் கூறுகையில் ''அடுத்த தலைமுறையில் ஹார்ட்வேர் துறையிலும் எங்களுக்கான இடம் நிச்சயம் தேவை. இதனால் எதிர்காலத்தில் எங்களுக்குப் போட்டியாளர்களாக இருக்கப்போகும் நிறுவனங்களை எங்களால் நம்ப முடியாது. எனவே எங்களுக்கு நாங்களே மென்பொருள் தயாரிக்க முடிவுசெய்துவிட்டோம் என்றார். ஃபேஸ்புக் நிறுவனம் ஆகுளஸ் மற்றும் போர்டல் சாதனங்களுடன் ஆகுமென்ட் ரியாலிட்டி கண்ணாடிகளை உருவாக்குவதிலும் முனைப்புடன் இருக்கிறது. இதற்கு 'ஓரியன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் இந்த கண்ணாடிகளை 2023-ம் ஆண்டுக்கு முன்னதாக வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில்தான் ஆப்பிள் நிறுவனமும் தனது AR கண்ணாடிகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்திருந்தது.
ஏற்கெனவே ஃபேஸ்புக் மீது பலமுறை தனிநபரின் தகவல் பாதுகாப்பை உறுதிசெய்யாமல் இருந்ததற்காகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் தனது பிரேத்யக இயங்குதளத்தை எந்தவித சர்ச்சையையும் இல்லாமல் உருவாக்கி மக்களின் நம்பிக்கையைப் பெறுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்!