ஜியோ பங்குகளை பல்லாயிரம் கோடிக்கு வாங்கிய ஃபேஸ்புக்!

  • IndiaGlitz, [Wednesday,April 22 2020]

இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பங்குகளை உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் வாங்கி உள்ளது. ஜியோவின் 9.9 சதவீத பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.43,574 கோடிக்கு வாங்கியுள்ளது என்பதும் இதன்மூலம் ஃபேஸ்புக் நிறுவனம் முதல்முறையாக இந்திய சந்தையில் தனது முதலீட்டை தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

கொரோனா காரணமாக கடந்த சில வாரங்களாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனைத்து பங்குகளும் படுவீழ்ச்சி அடைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான கோடிகள் இழப்பை ரிலையன்ஸ் சந்தித்துள்ள நிலையில் ஃபேஸ்புக்கின் இந்த முதலீடு ரிலையன்ஸ் நிறுவனத்தின் நஷ்டத்தை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஜியோ பங்குகளை வாங்கியது குறித்து ஃபேஸ்புக் கூறுகையில், ‘இந்த முதலீடு இந்தியா மீதான எங்கள் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும், இந்தியாவில் ஜியோவால் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்ததாகவும், நான்கு ஆண்டுகளில் ஜியோ 388 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளை பெற்று அனைத்து மக்களையும் ஆன்லைனில் கொண்டு வந்து மிகப்பெரிய தொலைத்தொடர்பு புரட்சியை செய்துள்ளது என்றும், இதுவே நாங்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய தூண்டியது என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் கூறுகையில், ’இந்தியாவில் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு இதுதான் என்றும் ஜியோ தன் சேவைகளை அறிமுகப்படுத்திய நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் டாப் 5 நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதாகவும் ஃபேஸ்புக்குடன் இணைந்து இன்னும் பல சலுகைகளை பயனாளுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது