நாளை முதல் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு தடையா? அதிர்ச்சி தகவல்!
- IndiaGlitz, [Tuesday,May 25 2021]
புதிய சமூக வலைதள விதிகளுக்கு கட்டுப்படாமல் இருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் எதிரானது செய்திகள் பரப்புவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஓடிடி தளங்கள் உள்பட அனைத்து சமூக வலைத்தளங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்த பிப்ரவரியில் ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசு வெளியிட்டது.
இந்த விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இதை அமல்படுத்த பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்கள் 6 மாதம் அவகாசம் கேட்டு இருந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள தலைமை அலுவலகங்களில் இருந்து இன்னும் எந்த அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் புதிய விதிகளுக்கு இணங்காத அனைத்து சமூக வலைதளங்களுக்கும் தடை விதிப்பது மட்டுமின்றி குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒருசில செயலிகள் புதிய சமூக ஊடக வழிகாட்டுதலுக்கு இணங்குவதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.