ரூபாய் நோட்டில் கொரோனா வைரஸா??? பதைக்க வைக்கும் தகவல்!!!
- IndiaGlitz, [Tuesday,October 13 2020]
கடந்த பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் பொருட்களின் மீது 3 நாட்கள் வரையிலும் தங்கியிருக்கும் என்ற அறிவிப்பை அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் வெளியிட்டு இருந்தது. இந்த அறிவிப்பை இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகளும் உறுதிப்படுத்தி இருந்தனர். காண்ணாடிப் பொருட்கள், கைப்பிடி, கதவு, அட்டைப்பெட்டி போன்ற பொருட்களின் மேல் ஒட்டியிருக்கும் கொரோனா வைரஸ் மற்றவர்களைத் தாக்கி மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறியிருந்த நிலையில் மீண்டும் அதிர்ச்சி ஏற்படுத்தும் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிஎஸ்ஐஆர்ஓ என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர்வாழும் எனத் தெரிவித்து உள்ளனர். மேலும் செல்போன் ஸ்கிரீன்கள், எவர்சில்வர் பொருட்களிலும் 28 நாட்கள் வரை கொரோனா வைரஸ் தங்கியிருக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். மேலும் மிகக் குறைந்த வைரஸ் அதிக நாட்கள் உயிர் வாழ்வதாகவும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
ரூபாய் நோட்டுகளில் வைரஸ் தங்கி இருந்ததற்கான அடையாளங்களை கடந்த 2018, 2019 போன்ற ஆண்டுகளில் இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருந்தனர். இந்நிலையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரையிலும் தங்கியிருக்கும் என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறியிருப்பது குறித்து மேலும் பதட்டம் அதிகரித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.