3 ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி அவசியமா? நிபுணர்களின் விளக்கம் என்ன?
- IndiaGlitz, [Wednesday,September 01 2021]
2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் உடலில் உருவாகும் நோய்எதிர்ப்பு திறன் நாட்கள் செல்ல செல்ல குறைவதாக நச்சு உயிரியியல் நிபுணர் ஜெயஸ்ரீ எச்சரித்துள்ளார். இதனால் கொரோனா தடுப்பூசி உருவாக்கும் நோய் எதிர்ப்புதிறன் குறித்த அறிக்கைகளை ஆராய்ந்து விரைவில் இந்தியாவிலும் கொரோனா 3 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவின் FDA சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் மார்டனா மற்றும் பைசர் கொரோனா தடுப்பூசிகளை 2 டோஸ் செலுத்திக்கொண்ட பின்னர் உருவான நோய் எதிர்ப்பு திறன் நாட்கள் செல்லசெல்ல குறைந்து வருவது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால் அந்தத் தடுப்பூசிகளுக்கான 3 ஆவது டோஸ் தடுப்பூசிகளை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் செலுத்திக் கொள்ளலாம் என FDA தடாலடி அறிவிப்பு வெளியிட்டது.
அதேபோல இந்தோனேசியாவில் நோய்பாதிப்பு அதிகம் கொண்ட மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு அந்நாட்டில் 3 ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி விட்டது. மேலும் இஸ்ரேலில் 40 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 3 ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பலருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் கருத்து வெளியிட்ட சீரம் நிறுவனத்தின் செயல் தலைவர் ஆதர் பூர்னவாலா கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தப்பட்ட பிறகும் அதனால் உருவாகும் செயல்திறன் குறைவதாகத் தெரிவித்து இருந்தார். இதனால் சீரம் நிறுவனத்தில் பணியாற்றும் அனைவருக்கும் மீண்டும் 3 ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.
தற்போது இதேபோன்ற கோரிக்கை மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் எழத் துவங்கி இருக்கிறது. மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இதய அறுவைச் சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, புற்றுநோய் உள்ளவர்களின் உடலில் ஏற்கனவே நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு கட்டாயம் 3 ஆவது டோஸ் செலுத்துவது அவசியம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து ஐசிஎம்ஆர் விரையில் முடிவெடுத்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் இந்திய மருத்துவர்கள் கூறிவருகின்றனர்.