தமிழகத்தில் பள்ளி திறப்பு குறித்து மருத்துவக்குழு முக்கியப் பரிந்துரை!
- IndiaGlitz, [Wednesday,July 28 2021]
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பெருமளவிற்கு தணிந்து இருக்கிறது. அதோடு கடந்த சில தினங்களாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளினால் ஏழை மாணவர்கள் படும் அவலத்தைக் குறித்தும் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்தும் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கொரோனா நோய்த்தொற்றின் 3 ஆவது அலைத்தாக்கம் குழந்தைகளை அதிகம் பாதிக்காது என்றும் இதனால் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளைத் திறக்கலாம் என்றும் மருத்துவ வல்லுநர் குழு தமிழக அரசிற்கு பரிந்துரை செய்திருக்கிறது. இதுகுறித்து கருத்துக் கூறிய மருத்துவர்கள் கொரோனா வைரஸ் உடலில் ஒட்டிக் கொள்வதற்கான ACE ரிசப்டார் செல்கள் குழந்தைகள் உடலில் முழுமையாக வளராது. இதனால் கொரோனா வைரஸ் குழந்தைகளை அதிகம் பாதிக்காது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் தமிழகத்தில் இதுவரை 25 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதில் 93 ஆயிரத்து 82 பேர் மட்டுமே 12 வயதுக்குட்பட்டவர்கள். இதனால் கொரோனா பாதித்த குழநதைகளின் மொத்த சதவீதம் 3.6%. இந்தப் புள்ளிவிவரங்களை பார்க்கும்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் குழந்தைகள் பாதிக்கப்படுவது மிகவும் குறைவு என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதைத்தவிர தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து கருத்துத் தெரிவித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 9-12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாக நேற்று செய்தியாளர்களிடம் கூறி இருந்தார்.
இதனால் தமிழகத்தில் ஊரங்கு தளர்வுகள், பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தி நிபுணர்களுடன் கலந்து முடிவு செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.