தொடர்ந்து மது அருந்தினால் என்ன ஆகும்?
- IndiaGlitz, [Wednesday,November 03 2021]
இன்றைய காலக்கட்டத்தில் மது அருந்துவது எல்லாம் மிகவும் சாதாரண விஷயமாக மாறிவிட்டது. அதுவும் பண்டிகை காலங்களில் மதுவை விரும்பாதவர்கள் கூட ஒருமுறை அருந்திப் பார்த்தால்தான் என்ன? என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர். கூடவே இளைஞர் பட்டாளத்தின் கொண்டாட்டங்களில் மது பிரதான இடத்தைப் பிடித்து விடுகிறது.
இந்நிலையில் மது அருந்துவதால் உடலுக்கு என்ன பாதிப்பு வரும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் மது பிரியர்களை அதிகளவு தாக்கும் நோயாக கல்லீரல் நோய் இருக்கிறது.
அதிக மருந்து அருந்தும்போது ஏ.ஆர்.எல்.டி எனப்படும் கல்லீரல் நோய் மனிதர்களை தாக்குகிறது. இதை ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய், ஆல்கஹால் ஹெபடைடிஸ், ஆல்கஹால் சிரோசிஸ் என மூன்று வகையாக மருத்துவர்கள் பிரிக்கின்றனர்.
இந்த 3 வகையான கல்லீரல் பாதிப்புகளும் உடலில் தீவிரப் பிரச்சனையை ஏற்படுத்தி விடுகின்றன.
கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு அதிகளவு சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகள் இருக்கும்போது உடனே சுதாரித்துக் கொள்வது நல்லது.
பொதுவாக சோர்வு மற்றும் பலவீனம் பரம்பரை நோய்களாலும், வைரஸ் பாதிப்புகள் மற்றும் மது அருந்துவதாலும் ஏற்படுகிறது. இப்படி இருக்கும்போது பசியே உணர்வே ஏற்படாது. இதனால் ஒரு நபருக்குத் தேவையான ஊட்டச்சத்து விஷயத்தில் பாதிப்பு ஏற்பட்டு ஆளே அடையாளம் தெரியாமல் உருக்குலைந்துபோய் விடுகிறார்.
கல்லீரல் பிரச்சனை இருக்கும் நபருக்கு பசி ஏற்படாமல் குமட்டலும் இருந்துகொண்டே இருக்கும். இதனால் சாப்பிடுவதில் அந்த நபருக்கு சிக்கல் ஏற்பட்டு உடலுக்குத் தேவையான ஆற்றல் இல்லாமல் போய்விடும்.
கல்லீரல் பாதித்த நபருக்கு எடையிழப்பு ஏற்படும். கூடவே வயிற்றுவலி காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.
தொடர்ந்து ஒருநபர் மது அருந்திக் கொண்டே இருக்கும்போது கல்லீரல் வீக்கம் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதனால் உயிரிழப்பு வரை அந்த நபருக்கு பாதிப்பு வரலாம். எனவே மது விஷயத்தில் கவனம் தேவை.