விளம்பரமே இல்லாமல் ரூ.1.25 கோடி நிதியுதவி செய்த சுஷாந்த்சிங்: கவர்னர் மகனின் மலரும் நினைவுகள்
- IndiaGlitz, [Wednesday,June 17 2020]
இயற்கை பேரிடர் வரும்போதெல்லாம் ஒரு லட்சம் ரெண்டு லட்சம் நிதியுதவி செய்யும் நடிகர்கள் கூட போட்டோவுக்கு போஸ் கொடுத்து தங்களை தாங்களே விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் எந்தவித விளம்பரமும் இல்லாமல் ரூ.1.25 கோடி நிதி உதவி செய்துவிட்டு அமைதியாக இருந்த சுஷாந்த் சிங் குறித்த தகவல் தற்போது வந்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நாகலாந்து மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அம்மாநில முதல்வர் பொதுமக்களுக்கு வெள்ள மீட்பு பணிக்காக தாராளமாக உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கையை அடுத்து ஏராளமானோர் தங்களால் முடிந்த நிதி உதவி செய்தனர்.
அந்த சமயம் டெல்லியில் படப்பிடிப்பில் இருந்த சுஷாந்த் சிங் நேராக நாகலாந்து மாநிலத்தில் உள்ள திமாபூர் என்ற பகுதிக்கு சென்று அம்மாநில முதல்வரை சந்தித்து 1.25 கோடி ரூபாய் நிதி உதவி செய்தார். இந்த நிதியுதவிக்கு போன் மூலம் நன்றி தெரிவித்த அப்போதைய கவர்னர் ஆச்சார்யா, முடிந்தால் நேரில் சந்திக்கலாம் என்றார்.
ஆனால் அந்த நேரத்தில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து சரியாக இல்லாததாலும், டெல்லிக்கு அவசரமாக படப்பிடிப்புக்கு செல்லவிருந்ததாலும் இன்னொரு முறை வருவதாக கூறிவிட்டு சுஷாந்த்சிங் டெல்லி திரும்பினார்.
இந்த மலரும் நினைவுகளை அப்போதைய நாகலாந்து கவர்னர் ஆச்சார்யாவின் மகன் சதுர்த் ஆச்சார்யா தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். எந்தவித விளம்பரமும் இல்லாமல் ரூ.1.254 கோடி நிதி உதவி செய்த சுஷாந்த்சிங் குறித்த தகவல் தற்போது வெளிவந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.