நிர்பயாவின் தாய் குறித்து முன்னாள் டிஜிபி சர்ச்சை கருத்து

  • IndiaGlitz, [Saturday,March 17 2018]

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆண்களிடம் இருந்து தப்பிக்க பெண்கள் உடலிலும் மனதிலும் பலத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், தற்காப்பு கலைகளை பெண்கள் பயின்று கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் டிஜிபி ஒருவர் பலம் வாய்ந்த ஆண்கள் கற்பழித்தால் பலவீனமான பெண்கள் சரண் அடைந்துவிடுவது நல்லது என்று பேசியுள்ளது அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

சமுதாயத்தில் சாதனை படைத்த பெண்களை கௌரவித்து நினைவு பரிசு வழங்கும் விழா ஒன்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த விழாவில் டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி, பரப்பன அக்ரஹார சிறையின் அதிகாரியாக இருந்த ரூபா ஐபிஎஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கர்நாடக மாநில முன்னாள் போலீஸ் டிஜிபி சங்கிலியானா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியபோது, 'ஆஷா தேவிக்கு நல்ல உடலமைப்பு உள்ளது. அவரின் மகள் எந்த அளவிற்கு அழகாக இருந்திருப்பார் என்று எண்ணி பாருங்கள்' என்று பேசியபோதே மேடையில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் 'பலம் வாய்ந்தவர்கள் கற்பழிக்க முயற்சிக்கும் போது அவர்களிடம் சண்டையிடமால் சரண்டர் ஆகிவிடுங்கள். அதன்பின், அதை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வோம். இதன்மூலம் இதுபோன்ற சம்பவங்களில் உயிர்பலி ஏற்படுவதை தவிர்க்கலாம்” என்று பேசினார். இந்த பேச்சு மேடையில் இருப்பவர்களையும் விழாவுக்கு வந்திருந்தவர்களையும் முகம் சுழிக்க வைத்தது. இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் பதிவாகி வருகிறது.