கொரோனாவால் திணறும் ஐரோப்பிய நாடுகள்!!!
- IndiaGlitz, [Thursday,March 19 2020]
உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியிருக்கிறது. மேலும், இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் இணைய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதுவரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 184,975 ஆகவும் இறப்பு 8,657 ஆகவும் பதிவு செய்யப் பட்டு இருக்கிறது. மேலும், 166 நாடுகளில் கொரோனா பாதிக்கப் பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிகின்றன. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது 8 நாடுகளுக்கு கொரோனா பரவி இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. அதில் இந்தியாவில் 147 பேர் தொற்றினால் பாதிக்கப் பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இத்தாலி
கொரோனா பாதிப்பு சீனாவை படுத்தி எடுத்த நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகள், அதன் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. முக்கியமாக இத்தாலியில் கொரோனா பாதிப்பு கடும் அச்சத்தை வரவழைத்து இருக்கிறது. நேற்று ஒருநாள் மட்டும் கொரோனாவால் 475 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து அந்நாடு நேற்று அதிக உயிர் சேதத்தைச் சந்தித்து இருக்கிறது.
அந்நாட்டில், இதுவரை கொரோனா வைரஸால் 35,713 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் 2,976 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. இதன் பரவல் விகிதம் மார்ச் 15 ஆம் தேதியில் இருந்து அதிகரித்து வரவும் செய்கிறது. சீனாவிற்கு அடுத்தப் படியாக கொரோனா வைரஸ் இத்தாலியில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தாலியின் லொம்பார்ட்டி மாகாணத்தில் இந்த நோய் தொற்று அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஒட்டு மொத்த நாடும் முடக்கப் பட்டு இருக்கிறது. எனினும், பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத் துறை திணறி வருவதாக செய்திகள் வெளிவருகின்றன. மேலும், இத்தாலியில் உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப் படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஸ்பெயின்
ஸ்பெயின் நாட்டில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 13,716 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும் பரவல் விகிதம் அதிகரித்த நிலையிலேயே இருந்து வருகிறது. மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்தே நோய் தொற்று மிகவும் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 598 ஆக உயர்ந்து இருக்கிறது. வைரஸ் பரவல் விகிதமும் இந்நாட்டை பொறுத்த வரை கவலை அளிக்கும் நிலையிலேயே இருக்கிறது.
பிரான்ஸ்
ஐரோப்பிய நாடுகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ள நிலையில் பிரான்ஸில் கொரோனா பரவல் விகிதம் கடும் பயத்தையே வரவழைக்கிறது. மார்ச் 10 ஆம் தேதியில் இருந்து வெறுமனே 8 நாட்களில் வைரஸ் பரவல் விகிதம் கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது. இந்நாட்டில் கொரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 7,652 ஆகவும், உயிரிழப்பு 175 ஆகவும் உயர்ந்து இருக்கிறது குறிப்பிடத் தக்கது.
பெல்ஜியம்
இந்நாட்டில் தற்போது கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய் தொற்று 1,486 பேருக்கு இருப்பது உறுதி செய்யப் பட்ட நிலையில் 14 உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
ஜெர்மனி
ஜெர்மனியில் இந்த வாரத்தில் இருந்துதான் கொரோனா பரவலின் விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. இதுவரை பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 8,198 ஆகவும், இறப்பு 13 ஆகவும் கட்டுக்குள் வைக்கப் பட்டு இருக்கிறது. இறப்பு எண்ணிக்கை குறைந்து இருப்பதே சிறிதளவு மகிழ்ச்சியை தருகிறது.
சுவிட்சர்லாந்து
இந்நாட்டில் பரவல் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டாலும் நிலைமைக் கட்டுக்குள் வைக்கப் பட்டு இருக்கிறது. இதுவரை 3,003 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டு இருக்கிறது. மேலும், 21 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஐக்கிய நாடுகள்
பிரிட்டன் உள்ளிட்ட ஐக்கிய பகுதிகளில் தற்போது தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. 2,626 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்ட நிலையில், 60 உயிரிழப்பும் நிகழ்ந்து இருக்கிறது.
நெதர்லாந்து
நெதர்லாந்தில் தற்போது பரவல் விகிதம் புதிதாக அதிகரித்து இருக்கிறது. நோய் தொற்று 2,051 பேருக்கு இருப்பது உறுதி செய்யப் பட்ட நிலையில் 58 உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
சீனா
சீனாவில் கொரோனா பரவல் விகிதம் கடந்த பிப்ரவரி 12 ஐ காட்டிலும் முற்றிலும் குறைந்து இருக்கிறது. புதிய பரவல் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. இதுவரை பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 81,174 என உறுதிச் செய்யப் பட்டு இருக்கிறது. மேலும், இறப்பு எண்ணிக்கை 3,242 எனவும் கணிக்கப் பட்டு இருக்கிறது.
ஈரான்
ஈரான் நாட்டில் கொரோனா பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்த நிலையில் பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. பாதிப்பு எண்ணிக்கை 7,361 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,135 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.
தென் கொரியா
பரவிய வேகத்தில் உலக நாடுகளே பயந்த நிலையில் தென் கொரியாவில் கொரோனா பரவல் விகிதம் கட்டுக்குள் கொண்டு வரப் பட்டு இருக்கிறது. இதுவரை பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 8,413 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆகவும் இருக்கிறது. உயிரிழப்பு குறைந்து காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
அமெரிக்கா
அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களில் கொரோனா பரவிய நிலையில் அந்நாடு அவசர நிலையைப் பிறப்பித்து உத்தரவிட்டது. மேலும், பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது இறப்பு எண்ணிக்கை 97 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அதிகமான நபர்களுக்கு நோய் தொற்று பரவி இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. 7,087 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப் பட்டு இருக்கிறது.
இந்தியா
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் 276 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. ஹாங்காங்கில் ஒருவர், ஈரானில் 255 பேர், இத்தாலியில் 5 பேர், குவைத்தில் ஒருவர், ருவாண்டாவில் ஒருவர், ஐக்கிய அரபு எமிரேட்டில் 12 பேர், இலங்கையில் ஒருவர் என மொத்தம் 276 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
மக்களவையில் எழுப்பப் பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தத் தகவலை எழுத்துப் பூர்வமாக அளித்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும், உள்நாட்டில் 169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்ட நிலையில் 3 உயிரிழப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.