'தொடங்கலாமா? 'எதிர்நீச்சல் 2' டீசர் வீடியோ.. ஜனனி கேரக்டரில் யார்?
- IndiaGlitz, [Tuesday,December 10 2024]
சன் டிவியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சீரியல்களில் ஒன்று ‘எதிர்நீச்சல்’ என்பதும், இந்த சீரியல் 2022 ஆம் ஆண்டு ஆரம்பித்து சுமார் 700 எபிசோடுகளுக்கும் அதிகமாக ஒளிபரப்பான நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவு பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜி. மாரிமுத்து மறைவு காரணமாக குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென இந்த சீரியல் முடிக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இருப்பினும், இயக்குனர் திருச்செல்வம் எதிர்நீச்சல் 2 சீரியல் குறித்த அப்டேட்களை அவ்வப்போது தெரிவித்து வந்தார். தற்போது எதிர்நீச்சல் 2 சீரியலின் டீசர் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த டீசரில் கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா ஆகியோர் அதே நம்பிக்கையோடு அதே வேகத்தோடு உங்களை பார்க்க வருகிறோம் என்ற வசனத்துடன் தொடங்கி தொடங்கலாமா? என்ற வசனத்துடன் டீசரை முடித்துள்ளனர்.இந்த டீசர் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
மேலும், இந்த சீரியலில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்த மதுமிதா, இன்னொரு சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால், அவருக்கு பதிலாக பார்வதி நடிக்க உள்ளார். ஜனனி கேரக்டருக்கு பார்வதி மிகவும் பொருத்தமானவர் என்றும் கூறப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் இந்த சீரியல் தொடங்க இருப்பதை அடுத்து, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.