Download App

Etharkkum Thunindhavan Review

எதற்கும் துணிந்தவன் - சூர்யாவின் வேற லெவல் ஹீரோயிசம் 

சூர்யா சமீப காலங்களில் 'சூரரைப் போற்று' படத்தில் லட்சியம் கொண்ட சாமான்யன் மாறன் மற்றும் 'ஜெய் பீம்' படத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் துணிச்சல் மிக்க  வழக்கறிஞர் சந்துரு என ஹீரோயிசத்தின் வெவ்வேறு பரிமாணங்களை  காட்டி சரிந்திருந்த  தன்னுடைய மார்க்கெட்டை  மீட்டெடுத்தார். 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் தன்னுடைய தைரியத்தால்  ஹீரோயிசத்தை இன்னொரு கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறார்.  எப்படி என்பதை பார்ப்போம்.

ஒரு கிராமத் தலைவரின் (சத்யராஜ்) மற்றும் சரண்யா பொன்வண் மகனான கண்ணபிரான் (சூர்யா) ஏழு பேரைக் கொன்று குவிப்பதுடன் படம் தொடங்குகிறது. போலீசார் அவரைப் நோக்கி  செல்லும்போது, ஃப்ளாஷ்பேக் கில் அவர் ஒரு வக்கீல் என்றும்  குறிப்பாக பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடுபவர்  என்பதும் காட்டபடுகிறது.  வடக்கு கிராமத்தைச் சேர்ந்த பணக்கார செல்வாக்கு மிக்க மனிதர் இன்பா (வினய் ராய்) தனது உதவியாளர்களுடன் சேர்ந்து பாலியல் குற்றங்கள், மிரட்டல் மற்றும் கொலைகளில் வெளிப்படையாக ஈடுபடுகிறார். கண்ணபிரான் ஆதினியை (பிரியங்கா அருள் மோகன்) காதலித்து திருமணம் செய்து கொள்கிறான். கண்ணபிரான் இன்பாவுக்கு எதிரான சண்டையில் அவனுடைய சொந்தக் குடும்பம் மிகவும் அதிர்ச்சியூட்டும் விதத்தில் பாதிக்கப்படுகிறது, எப்படி எல்லோருக்கும் நியாயம் கிடைக்கிறது என்பதுதான் மீதி  திரைக்கதை.

சூர்யா தனது பெற்றோருடனான பிணைப்பு மற்றும் பிரியங்கா அருள் மோகனுடனான காதல் என ஆரம்ப காட்சிகளில் மசாலா ஹீரோவாக வலம்  வருகிறார் .  பிரச்சினைகள்  தீவிரமாகும்போது உணர்ச்சி பிழம்பாக மாறி தன்னுடைய அசாத்திய நடிப்பால் மின்னுகிறார்.  அவர் வில்லன்களுக்கு சாவு  மணி அடிப்பது மட்டுமல்லாமல், தன்னைச் சுற்றியுள்ள பெண்களிடம் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறார். பெரும்பாலான முன்னணி ஹீரோக்கள் தங்கள் இமேஜுக்கு பயந்து மறுக்க கூடிய  படத்தின் முக்கிய காட்சியை தைரியமாக ஏற்றுக்கொண்ட சூர்யாவுக்கு பாராட்டுக்கள். படம் சொல்ல வரும்  செய்தி ஒன்றும்  புதியதல்ல, ஆனால் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட வேண்டிய ஒன்று , சூர்யா அதை சொல்வதால் பலமும் வீரியமும் நிச்சயம் கூடும் என்பதில் சந்தேகம் இல்லை. பிரியங்கா அருள் மோகன் 'டாக்டர்' படத்தில் இருந்து தனது அழகையும் துடுக்குத்தனத்தையும் இதில்  வைத்துக் கொண்டுள்ளார்.  முதல் பாதியில் வெறும் பொம்மை போல் தான் வருகிறார்  ஆனால் அவருக்கும் கணவர் சூர்யாவுக்கும் நினைத்துப் பார்க்க முடியாதது நடந்துவிடும்பொழுதும் பின் அதிலிருந்து மீண்டு நிமிரும்போதும் அவர் திறமையான நடிகை என்பதை நிரூபித்துள்ளார் . வினய் ராய் தனது உடல் மொழியிலேயே  ஒரு பாலியல் குற்றவாளியை கண்முன் நிறுத்திவிடுகிறார் மற்றபடி அவருக்கு நடிக்க வாய்ப்பு குறைவு தான்.  சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், திவ்யா துரைசாமி, இளவரசு மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் கதைக்கு வண்ணம் சேர்க்கிறார்கள்  சூரியின் நகைச்சுவை அவரது சமீபத்திய படங்களை ஒப்பிடும்போது பரவாயில்லை.

முதல் பாதியில் பல சுமாரான காட்சிகள் இருந்தாலும்  சூர்யா இளவரசுக்கு சவால் விட்டு பிரியங்காவை திருமணம் செய்து கொள்ளும் சுவாரசியமான அந்த பகுதி சிறப்பு.   இரண்டாம் பாதியில் திரைக்கதை  பிரச்சனைகளை மையமாக கொண்டு இயங்குவதால் வேகம் எடுக்கிறது.   

மைனஸ் என்று பார்த்தல் முதல் பாதியில் சூர்யாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் இடையேயான உரையாடல்கள் செயற்கையாக தெரிகிறது.   முதல் ஒரு மணிநேரம் பொறுமையை சோதிக்கிறது.  சூர்யாவின் இறந்து போன தங்கை சம்பத்தப்பட்ட காட்சிகள்  ஹீரோவின் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்தாலும் மாரி  செல்வராஜின்  'கர்ணனை' நினைவூட்டுகிறது. பெண்கள் தைரியமாக சமூகத்தை எதிர்கொண்டு நீதிக்காக போராட வேண்டும் என்ற செய்தியை சொல்லும் படத்தின் ஹீரோ கடைசியில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தண்டனை வழங்குவது முரணாக உள்ளது.  

டி. இமானின் பாடல்கள் சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கின்றன மற்றும் அவரது பின்னணி இசை காட்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆர்.ரத்னவேலுவின் ஒளிப்பதிவு எப்பொழுதும் போல் நேர்த்தி  ரூபனின் எடிட்டிங் குறிப்பாக இரண்டாம் பாதியில் வேகத்தை கூட்டி ரசிக்க வைக்கிறது. இயக்குனர் பாண்டிராஜ் நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஸ்கிரிப்டை உருவாக்கியுள்ளார். வணிக கட்டமைப்புக்குள் தான் சொல்ல வந்த கருத்துக்களை சூர்யாவின் வலுவான குரலை பயன்படுத்தி  வெற்றிகரமாக பதிவுசெய்திருக்கிறார் .  சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக படத்தை தயாரித்துள்ளது.

தீர்ப்பு : சூர்யாவின் இன்னொரு பரிமாண ஹீரோயிசத்துக்காகவும் பெண் வன்கொடுமைக்கு எதிரான குரலுக்காகவும் எதற்கும் துணிந்தவனுக்கு தாராளமாக ஆதரவு தரலாம்.

Rating : 3.5 / 5.0