ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- IndiaGlitz, [Thursday,November 23 2017]
அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் -ஓபிஎஸ் அணிக்கே என தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெரும்பான்மையான சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அந்த அணிக்கே இருப்பதால் இந்த சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக கட்சி, சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளும் முழு உரிமை ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் இரட்டை இலை வெற்றியை கொண்டாடுகின்றனர். ஜெயலலிதா ஆசி, கடவுளின் ஆசியோடு இரட்டை இலை சின்ன வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளதாகவும், ஒன்றரை கோடி தொண்டர்கள் மகிழும் வண்ணம் வந்த தீர்ப்பு இது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்
இரட்டை இலை கிடைத்ததன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறது என்பது தவறான கருத்து என்றும், எங்கள் பக்கம் நியாயம் இருந்ததாலும், ஆதாரங்களை சரியாக ஒப்படைத்த காரணத்தாலும் தான் எங்களுக்கு இரட்டை இலை கிடைத்துள்ளது என்றும் முதல்வர் மேலும் கூறினார்.