சசிகலா அதிமுகவில் இல்லை… விளக்கம் அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!
- IndiaGlitz, [Friday,June 04 2021]
தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று அக்கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் சசிகலா அதிமுகவில் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.
திருமதி சசிகலா, அவரது தொண்டர் ஒருவருடன் நேரடியாகத் தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் கட்சியை சரிப்படுத்தி விடலாம். நான் இருக்கிறேன் என்பது போன்ற சொற்களை திருமதி சசிகலா கூறியிருந்தார். இதையடுத்து சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவாரா? இதனால் அதிமுகவில் மீண்டும் குழப்பம் வருமா? என்பது போன்ற சந்தேகத்தைப் பலரும் எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இன்று கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கொண்டு 9 மாவட்டச் செயலாளர்களுடன் நேரடியாக ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். அந்தக் கூட்டத்தில் சென்னை மாநகரத்துக்கு உள்ளிட்ட 18 தொகுதிகளில் அதிமுக ஏன் ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை என அவர் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
அதோடு தேர்தல் முடிவிற்கு பின்பு நடைபெறும் இந்த முதல் கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டம் முடிந்தவுடன் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது சசிகலாவின் ஆடியோ சோஷியல் மீடியாவில் வெளியானது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதில் அளித்த அவர், சசிகலா அதிமுக கட்சியில் இல்லை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது, தான் அரசியலில் இருந்து விலகிவிட்டதாக ஊடகம் மற்றும் பத்திரிகைகளுக்கு அவர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். எனவே அந்த ஆடியோக்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க எதுவும் இல்லை, அவர் அமமுக தொண்டர்களுடன்தான் பேசி வருகிறார் என்று பதில் அளித்துள்ளார்.