ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய விசாரணை கமிஷன்: முதல்வர் அதிரடி அறிவிப்பு
- IndiaGlitz, [Thursday,August 17 2017]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும், தினகரன் அணிக்கும் இடையிலான கருத்துவேறுபாடு கடந்த சில நாட்களாக உச்சகட்டத்தில் உள்ளது. தினகரன் உள்பட சசிகலா குடும்பத்தினர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைகள் சமீபகாலமாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிச்சாமி, 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும், ஜெயலலிதா வாழ்ந்த வீடான 'வேதா இல்லத்தை' ஜெயலலிதா நினைவிடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் 'வேதா இல்லம்' பொதுமக்கள் பார்வைக்கும் அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் 'வேதா இல்லம்' சசிகலா குடும்பத்தினர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும், ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா குடும்பத்தினர்களே காரணம் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் எழுப்பி வந்து கொண்டிருக்கும் நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பால் சசிகலா குடும்பத்தினர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழநிச்சாமியின் இந்த அறிவிப்புக்கு ஓபிஎஸ் அணியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி இதுகுறித்து கூறியபோது, 'வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றும் அதே நேரத்தில் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்றும் சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மைகள் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.