எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவு வாபஸ்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அதிரடி
- IndiaGlitz, [Tuesday,August 22 2017]
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் என மூன்று அணிகள் இருந்த நிலையில் நேற்று ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் அதிகாரபூர்வமாக இணைந்தது. மேலும் ஓபிஎஸ் துணை முதல்வராகவும் பதவியேற்று கொண்டார்.
இந்த நிலையில் மூன்றாவது அணியாக செயல்பட்டு கொண்டிருந்த தினகரன் அணியின் ஆதரவாளர்களான 19 எம்.எல்.ஏக்கள் இன்று தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் அவர்களை சந்தித்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் கவர்னரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் தனித்தனியே கடிதம் அளித்துள்ளனர்.
அதிமுகவுக்கு மொத்தம் 135 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். அதிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் 134 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் அதில் 19 பேர் வாபஸ் பெற்றுள்ளதால் தற்போது 115 எம்,.எல்.ஏக்கள் மட்டுமே அரசுக்கு ஆதரவாக உள்ளனர். இந்த நிலையில் ஆட்சியின் நிலை என்ன ஆகும், கவர்னர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கோருவாரா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.