Enkitta Mothathey Review
எண்பதுகளில் நடக்கும் அதுவும் தமிழ் சினிமாவில் ரஜினி கமலின் பொற்காலத்தை பற்றிய கதை என்ற ஒரு காரணமே போதும் எங்கிட்ட மோதாதே ஓடும் தியேட்டரை நோக்கி நாம் ஓட. புதுமுக இயக்குனர் ராமு செல்லப்பா நம் எதிர்பார்ப்பினை எந்தளவுக்கு பூர்த்தி செய்கிறார் என்பதை பாப்போம்.
நாகர்கோயிலில் சுவற்றிலும் சுட் அவுட் களிலும் படம் வரையும் நண்பர்களான நட்டி நட்ராஜ் ஒரு அதி தீவிர ரஜினி ரசிகர் அவர் சக தொழிலாளியும் நண்பனும் ஆகிய ராஜாஜியோ தீவிரமான கமல் ரசிகர். ஆட்டோவில் ரஜினி படம் வரைந்து கொண்டிருக்கும் நட்ராஜ் அதை கலைந்துவிடும் போலீஸ்காரனையே அடித்து துவைக்க எழும் பிரச்சினையால் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு செல்கிறார். கூடவே ராஜாஜியும் வந்து இருவரும் பைன்டர் தொழிலில் சம்பாதிக்க ஆரம்பிக்கின்றன. ராஜாஜி பக்கத்து வீட்டு பெண் பார்வதி நாயருடன் காதல்கொள்ள ஊரில் இருந்து வரும் அவர் தங்கை நட்டி மீது கண் வைக்கிறார். ’மனிதன்’ மற்றும் ’நாயகன்’ படங்கள் ஒரே தியேட்டரில் ரிலீஸ் ஆக இரு ரசிக தரப்புக்கிடையே கலவரம் வெடித்து தியேட்டர் துவம்சம் செய்யப்படுகிறது. ஆத்திரம் அடையும் கான்டீன் ஓனர் விஜய் முருகன் ரஜினி கமல் படங்களே ரிலீஸ் ஆக கூடாது என்று தியேட்டர் ஓனரும் அரசியல்வாதியுமான ராதாரவியுடன் சேர்ந்து கொண்டு திடடம் போடுகிறார். தடையை மீறி ராஜாஜி கமலின் சத்யா பட கட் அவுட்டை வரைய அவரை விஜய் முருகன் தாக்க நட்டி புகுந்து அடித்து காதை கிழிக்கிறார் ஜெயிலுக்கு போகிறார். வெளியே வந்த பிறகு நட்டி மற்றும் சஞ்சிதாவின் காதல் தெரிந்து நண்பர்களுக்குள் பகையாகி ராஜாஜி எதிரிகள் பக்கம் சேர்கிறார். அதன் பிறகு அரசியல் சதியை எப்படி நட்டி முறியடித்தார் நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதி கதை.
’சதுரங்க வேட்டை’ படத்திற்கு பிறகு நட்டி நட்ராஜ் மிகவும் ஜொலிப்பது இந்த படத்தில்தான். உடல் மொழி வசன உச்சரிப்பு, ஏன் சும்மா நின்றுகொண்டிருக்கும் போது கூட அப்படியே ரஜினி மாநெரிசங்களை பிரதிபலிக்கும் அவர் ரசிகராகவே வாழ்ந்து காட்டுகிறார். நடனத்தில் ஏகப்பட்ட முன்னேற்றம், சண்டை காட்சிகளில் அதிவேகம் என்றால் மிக நெருக்கமான காதல் காட்சிகளில் சஞ்சிதா ஷெட்டியுடன் ரவுண்டு கட்டி அடிக்கிறார். ராஜாஜி அளவான நடிப்பை தந்து கவர்கிறார் ஆனால் இடைவேளைக்கு பிறகு அவரை ஒரு துணை கதாபாத்திரம் போல் உலவ செய்தது உறுத்துகிறது. சஞ்சிதா ஷெட்டி எண்பதுகளின் சாதாரண வீட்டு பெண்ணை கண் முன் நிறுத்துகிறார் காதல் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ராஜாஜியின் காதலியாக வரும் பார்வதி நாயருக்கு வேலை அதிகம் இல்லை. ஆர்ட் டைரக்டர் விஜய் முருகனுக்கு கொடூர வில்லன் கதாபாத்திரம் ’கோலி சோடா’ மற்றும் ’இறைவி’யில் அமைந்தது போலவே இதிலும் கனகச்சிதம். நாக்கில் நரம்பில்லாமல் பேசும் அரசியல்வாதி கேரக்டர் எல்லாம் ராதாரவிக்கு அல்வா சாப்பிடுவது போல மிளிர்கிறார். முருகானந்தம் (இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவில் சொல்லுங்க ஜி என்று காமடி பண்ணியவர்) மற்றும் ரஜினி கமல் ரசிகர்களாக வரும் அனைவருமே ஆங்காங்கே சிரிப்பு மத்தாப்புகளை கொளுத்தி போட்டு கலகலப்பூட்டுகின்றனர்.
ரஜினியும் கமலும் உச்சத்தில் இருந்த போது இருவருமே அரசியலில் ஈடுபடாத போதும் அவர் ரசிகர்கள் அதில் பலமிக்க சக்திகளாக வளம் வந்தனர் என்ற உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது ’எங்கிட்ட மோதாதே’. ராதாரவி விஜய் முருகனிடம் சொல்வது போல ரஜினி கமலை விட அவர்களது ரசிகர்கள் அதிக பலம் வாய்ந்தவர்கள். நாராஜன் ஷங்கர் பாடல்களிலும் பின்னணி இசையிலும் இனிய 80களின் டச் வைத்து வெகுவாக படத்திற்கு பலம் சேர்கிறார். ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா, படத்தொகுப்பாளர் அதியப்பன் சிவா, கலை இயக்குனர் ஆறுச்சாமி மற்றும் சண்டை பயிற்சியாளர் மிராக்கள் மைகேல் ஆகிய அனைவரும் நிறைவான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் ராமு செல்லப்பா காட்சிகளில் எண்பதுகளை கொண்டு வருவதற்காக அதிகம் உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. அவருக்கு அதிகம் கைகொடுத்திருப்பது அவருடைய கூர்மையான வசனங்களே. முதல் பாதி முழுக்க கதை நடக்கும் காலத்திற்கே சென்று நடப்பதை நேரில் பார்க்கும் உணர்வு வருகிறது. காட்சிகளும் சுவாரசியமாக நகர்கின்றன. இரண்டாம் பாதியில் கதையில் நட்டிக்கும் விஜய் முருகனுக்குமான பகையில் எதார்த்தம் மறைந்து ஒரு சாதாரண மசாலா ரூட்டுக்கு சென்று நொண்டி அடிப்பது பெரிய ஏமாற்றம். நட்டி ஆயுதம் ஏந்தி வரும் 10-15 பேரை அசால்ட்டாக பந்தாடுகிறார் அவர் உடம்பில் ஒரு சிராய்ப்பு கூட இல்லாமல். நட்டி ரஜினியின் பாணியை பின்பற்றுபவராக இருக்கலாம் அதற்க்காக அவரை தலைவர் ரேஞ்சுக்கு டிஷ்யூம் டிஷ்யூம் போட வைத்ததெல்லாம் கொஞ்சம் ஓவர். பல காட்சிகள் திரும்ப திரும்ப ஒரே பாணியில் வருவதும் அலுப்பு தட்ட வைக்கிறது.
ரஜினி கமல் சகாப்தத்தின் பொற்கால நாட்களை ரசிப்பதற்கும் நட்டியின் நடிப்பிறகாகவும் சுமாரான திரைக்கதைக்காகவும் பார்க்கலாம்.
- Read in English