தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஆங்கில ஆசிரியர்: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Wednesday,June 24 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கோடிக்கணக்கான மக்கள் வேலையின்றி வருமானம் இன்றி உள்ள நிலையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சரிவர சம்பளம் வராததால் அவர்கள் பெரும் கஷ்டத்தில் உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிகள் திறந்தாலும் திறக்காவிட்டாலும் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் சம்பளம் வீடு தேடி வந்து விடுகிறது. ஆனால் பல தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதலே சம்பளம் வரவில்லை என்று கூறப்படுகிறது. தனியார் பள்ளிகள் கட்டணம் வாங்க அரசு தடை விதித்துள்ளதால் சம்பளம் தர முடியவில்லை என்று பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டெல்லியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வராததால் வேறு வழியின்றி தனது குடும்பத்தை காப்பாற்ற தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் புகழ்பெற்ற சர்வோதயா பால வித்யாலயா என்ற பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக ஆங்கில ஆசிரியராக பணிபுரிபவர் வாஷிர் சிங். ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் இவருக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வரவில்லை. எனவே வீட்டுவாடகை மற்றும் குடும்பச் செலவுக்கு கஷ்டப்பட்டார்.
இதனை அடுத்து வேறு வழியின்றி தற்போது தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். ஆங்கில ஆசிரியராக டிப்டாப் உடையுடன் இதுநாள் வரை வலம் வந்த வாஷிர் சிங், தற்போது சாதாரண உடையில் தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு வீதி வீதியாக காய்கறி வியாபாரம் செய்து வருவது அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர் போலவே தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளத்தை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.