பழித்தீர்த்துக் கொண்ட இங்… 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி!
- IndiaGlitz, [Saturday,August 28 2021] Sports News
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியிலேயே வெற்றிப்பெற இருந்த இந்தியாவிற்கு பின்னர் மழை காரணமாக அந்த வெற்றி வாய்க்காமல் போனது. அடுத்த போட்டியை இந்தியா தன்வசம் ஆக்கிக்கொண்டது. அதனால் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றிருந்தது.
தற்போது 3 ஆவது டெஸ்ட் தொடர் போட்டி நடைபெற்றுவந்த நிலையில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தழுவி இருப்பதால் மீண்டும் 1-1 என்ற சமக் கணக்கில் இரு அணிகளும் காணப்படுகின்றன. இங்கிலாந்தின் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்ற 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா வெறும் 78 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இந்தியா படுதோல்வியைச் சந்திக்கப் போகிறது எனப் பலரும் அதிர்ச்சியை வெளியிட்டு இருந்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இங்கிலாந்து அணியினர் 432 ரன்களை எடுத்து இந்தியாவைவிட 354 ரன்கள் முன்னிலை வகித்துவந்தனர். இதில் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 121 ரன்களை குவித்து இருந்தார். இதனால் மிரண்டுபோன இந்திய ரசிகர்கள் இனி 4 ஆவது டெஸ்ட் பற்றிப் பேசுவோம் என்ற ரேஞ்சுக்கு வருத்தத்தை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் 3 ஆவது நாள் ஆட்டத்தில் களம் இறங்கிய இந்திய அணியின் புஜாரா, கோலி ஜோடி மீண்டும் இந்திய ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை ஏற்படுத்தினர். இதில் முதலில் களம் இறங்கிய கே.எல்.ராகுல் வெறும் 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்த போதிலும் நிலைத்துநின்றுவிட்ட புஜாரா 180 பந்துகளுக்கு 91 ரன்களை குவித்து இருந்தார். அதேபோல கேப்டன் கோலி 45 ரன்களை எடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து நான்காவது நாள் ஆட்டத்தைத் துவங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்டத்தைப் போலவே மீண்டும் அடித்து நொறுக்கும். இந்தியா வெற்றிப் பெற்றுவிடலாம் எனப் பலரும் நினைத்திருந்த நிலையில் முதலில் ஏற்கனவே களத்தில் இருந்த புஜாரா அதிர்ச்சி அவுட்டனார். கோலியும் 55 ரன்களை எடுத்து களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து ரஹானே 10 ரன்களுக்கும் ரிஷப் பண்ட் 1 ரன்னிற்கும் ஜடேஜா 30 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 278 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
இதையடுத்து 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடர் போட்டியின் 3 ஆவது டெஸ்ட் தொடர் போட்டியில் இங்கிலாந்து வெற்றிப் பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 4 ஆவது டெஸ்ட் தொடர்போட்டி இங்கிலாந்தின் ஒவல் மைதானத்தில் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.