இன்ஜினியரிங் படித்துவிட்டு தமிழ் சினிமாவில் கலக்கும் 5 பிரபலங்கள் பற்றி தெரியுமா?
- IndiaGlitz, [Thursday,September 15 2022]
இந்தியாவில் பொறியாளர்களின் பங்களிப்பைப் பாராட்டுவதற்காகச் சிறந்த இன்ஜினியர் எனப் பாரட்டப்படும் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் தேசிய பொறியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கட்டிடம் கட்டுவது முதற்கொண்டு இயந்திரம், தொழில்நுட்பம், விஞ்ஞானம், பேரிடர் மேலாண்மை என்று நாட்டின் முக்கிய அங்கமாக இருக்கும் பொறியாளர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆனாலும் இந்தத் துறையை விட்டுவிட்டு பலரும் வெவ்வேறு துறைகளில் தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்ஜினியரிங் படித்துவிட்டு சினிமா துறைக்கு வந்து சாதித்த சில பிரபலங்களின் தொகுப்பு… இதோ…
தமிழ்ச் சினிமாவில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலமாகத் ரசிகர்களைக் கட்டிப்போட்ட நடிகர் கார்த்தி பின்பு ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, தம்பி, தற்போது விருமன் என்று அசத்தி வருகிறார். அவர் சென்னையிலுள்ள கிரசண்ட் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நியூயார்க்கில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை பொறியியல் பட்டத்தையும் முடித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் தோன்றி காமெடி மற்றும் தனது மெமிக்ரி திறமையினால் தமிழ் ரசிகர்களைத் தன்பக்கம் ஈர்த்தவர் சிவகார்த்திகேயன். பின்பு மெரினா திரைப்படத்தில் நடித்து தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரேமோ, வேலைக்காரன், டாக்டர், அயலான், டான் எனப் பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் திருச்சியிலுள்ள ஜேஜே பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையிலுள்ள ஒரு கல்லூரியில் தனது எம்பிஏ பட்டத்தையும் முடித்துள்ளார்.
கௌதம் மேனன்
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர் பட்டியலில் இடம்பிடித்து இருப்பவர் கௌதம் மேனன். மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் தற்போது வெந்து தணிந்தது காடு எனக் கலக்கிக் கொண்டிருப்பவர். இவர் கேரளாவில் பிறந்திருந்தாலும் சென்னையிலுள்ள தனியார் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு திருச்சியிலுள்ள முகாம்பிகை பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்யா
நான் கடவுள் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் நடிகர் ஆர்யா. பின்பு மதராச பட்டிணம், பாஸ் என்ற பாஸ்கரன், வேட்டை, சேட்டை, ராஜா ராணி, ஆரம்பம், சார்பாட்டா பரம்பரை என்று பல படங்களில் நடித்துத் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவர் கேரளாவில் பிறந்தவர் என்றாலும் சென்னையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா பவானி சங்கர்
செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை அடுத்து வெள்ளித்திரை என்று படிப்படியாக முன்னேறி தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான இவர் தற்போது ஒரு டஜன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சென்னையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.