ரூ.24 லட்சம் சம்பாதித்த எஞ்சினியர், விவசாயியாக மாறி ரூ.2 கோடி சம்பாதித்த அதிசயம்
- IndiaGlitz, [Monday,April 10 2017]
படித்தவர்களாக இருந்தாலும் பாமரராக இருந்தாலும் தனது மகன் ஒரு எஞ்சினியர், டாக்டர் ஆக வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் கனவு காண்பது இந்தியாவில் வழக்கமாக உள்ளது. இதேபோன்ற ஒரு சராசரி பெற்றோருக்கு பிறந்த சச்சின் என்பவர் பெற்றோர்களின் விருப்பப்படி எஞ்சினியர் ஆகி ரூ.24 லட்சம் சம்பாதித்த நிலையில் திடீரென மனம் மாறி விவசாயியாக மாறியதால் இன்று ரூ.2 கோடி சம்பாதித்து வருகிறார். இந்த அதிசயம் சட்டீஸ்கர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மேத்பர் கிராமத்தில் வசிக்கும் வசந்த் ராவ் காலே என்பவரின் கனவு ஒரு விவசாயியாக ஆக வேண்டும் என்பது தான். ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக அவர் அரசு பணியில் சேர்ந்தார். இருப்பினும் அவரது விவசாயி ஆசை மனதில் இருந்து கொண்டே இருந்தது.
அவ்வப்போது ஊருக்கு வரும் அவரது பேரன் சச்சினுக்கு விவசாயம் குறித்தும் விவசாயத்தின் பெருமை குறித்தும் உண்மை சம்பவங்கள் மற்றும் கதைகளை கூறி வந்தார். இதனால் சச்சின் அடிமனதில் விவசாயம் குறித்து ஒரு நல்ல அபிப்பிராயம் எழுந்தது.
இந்த நிலையில் பெற்றோரின் விருப்பப்படி எஞ்சினியர், எம்பிஏ, சட்டப்படிப்பு ஆகியவை முடித்து பி.எச்.டி பட்டமும் பெற்றார். அவருக்கு நல்ல வேலையும் கிடைத்து வருடத்திற்கு ரூ.24 லட்சம் வருமானமும் கிடைத்தது. ஆனாலும் தாத்தாவிடம் கேட்ட கதை அவரது அடிமனதில் எழுந்து கொண்டே இருந்தது.
தான் படித்த தொழில்நுட்பத்தை விவசாயத்தில் புகுத்தி தனது தாத்தாவின் கனவை நிறைவேற்ற முடிவு செய்தார். விவசாயம் என்பது பொருளாதார ரீதியில் ஒரு ஆபத்தான தொழில் என்று தெரிந்தும் அவர் ரூ.24 லட்சம் தரும் வேலையை உதறி விவசாயியாக மாறினார்.
கடந்த 2014ஆம் ஆண்டில் அக்ரிலைஃப் சொல்யூஷன்ஸ் பிரைவேட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். மேலும் அவர் ஒப்பந்த விவசாயம் என்ற முறையை கையாண்டர். இந்த ஒப்பந்த விவசாயமானது விவசாய உற்பத்தி வாங்குபவர் மற்றும் விவசாய தயாரிப்பாளர்க்ளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். வாங்குபவர் நிதிகளானது விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்கு தேவையான எல்லா வகையிலும் உதவும். பதிலுக்கு விவசாயி பயிர் வாங்குபவர் பரிந்துரைத்த மற்றும் வாங்குபவரின் முறைமையைப் பொறுத்து தயாரிப்புகளை நிகழ்த்த வேண்டும். இதனால் வாங்குபவர்களுக்கும் விவசாயிகளுக்கும் என இருவருக்குமே வெற்றி சாத்தியமாகும்.
தனக்கு சொந்தமான 24 ஏக்கரில் சூரிய மின்சாரம் உள்பட தனக்கு தெரிந்த அனைத்து புதிய தொழில்நுட்பத்தையும் அவர் பயன்படுத்தி நெல், காய்கறிகள் உள்பட பல்வேறு பயிர்களை பயிரிட்டார். மேலும் அந்த பகுதி விவசாயிகள் அனைவருக்கும் தனது தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுக்கின்றார்,. ஒப்பந்த விவசாயத்தில் அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைக்கின்றார். அதுமட்டுமின்றி விளையும் பொருட்களின் விற்பனையிலும் அவர் தொழில்நுட்பத்தை புகுத்தினார்.
இன்று, சச்சினின் நிறுவனத்தின் கீழ், 200 ஏக்கர் நிலத்தில் 137 விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையில் மகிழ்ச்சியாக விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் சச்சினுக்கு ஆண்டு வருமானம் ரூ.2 கோடி வரை கிடைக்கின்றதாம். சச்சின் மனைவி கல்யாணி அவர்களும் அவருடைய நிறுவனத்தின் நிதி பகுதி போன்றவைகளை கவனித்துக் கொள்கிறார்.
எனவே விவசாயிகள் அரசிடம் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், மானியங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதை விட்டுவிட்டு சச்சின் போல் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் காலத்திற்கு ஏற்றாற்போல் மாறி விவசாயம் செய்தால் கோடீஸ்வரராக மாறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.