தமிழ் சினிமாவில் அண்மைக் காலங்களில் நடந்துள்ள வரவேற்கத்தக்க மாற்றங்களில் ஒன்று கதநாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகும். கடந்த ஆண்டு ‘கபாலி’ படத்தில் தன் நடிப்பாலும் துணிச்சலான பாத்திரத் தேர்வாலும் கவனிக்க வைத்த சாய் தன்ஷிகா, மையப் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘எங்க அம்மா ராணி’. அறிமுக இயக்குனர் எஸ்.பாணி எழுதி இயக்கியுள்ள இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தில் காண்போம்.
மலேஷியாவில் வசிக்கும் துளசி (சாய் தன்ஷிகா), இரட்டைப் பெண் குழந்தைகளுக்குத் தாய். அவளது கணவன் சத்யா காணாமல் போகிறான். கணவன் இல்லாமல் தாய்நாடு திரும்ப முடியாத நிலையில் தனது மகள்கள் தாரா (வர்ஷா), மீரா (வர்ணிகா ) இருவரையும் மலேஷியாவில் தனியாக இருந்து பாதுகாக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது துளசிக்கு. திடீரென்று ஒரு அரிதான வியாதியால் தாரா இறந்துவிடுகிறாள். மீராவுக்கும் அதே வியாதி இருப்பது தெரியவருகிறது.
தனது வாழ்வின் ஒரே பிடிப்பான மீராவைக் காப்பாற்ற, துளசி என்ன செய்கிறாள் என்பதே மீதிக் கதை.
இதுபோன்ற ஒரு படத்தில் அம்மா- மகள்(கள்) பாசம் அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட்டால்தான் படத்துடன் ரசிகர்களால் ஒன்ற முடியும். இயக்குனர் பாணி அதைச் சரியாகவே செய்துவிடுகிறார். கதாபாத்திரங்களும் அவர்களின் சூழ்நிலையும் அவர்களுக்குள்ளான அன்பும் உறவும் தொடக்கக் காட்சிகளில் மிக அழகாகவும் அழுத்தமாகவும் பதிவுசெய்யப்படுகின்றன. எனவே குழந்தைகளுக்கு ஆபத்து வரும்போது அந்தத் தாய்க்கு ஏற்படும் வலி பார்வையாளருக்கும் சரியாகக் கிடத்தப்படுகிறது
ஆனால் இரண்டாம் பாதியில் படம் திடீரென்று ஆவி மற்றும் அமானுஷ்ய விஷயங்களில் பயணிப்பது ஒட்டவில்லை. அதற்கான காட்சிகளிலும் எந்த வித சுவாரஸ்யமும் இல்லை. இருந்தாலும் அந்த ஆவிக்கும் துளசிக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான பந்தம் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் இந்தக் குறையின் தாக்கம் குறைகிறது. இறுதியில் துளசி எடுக்கும் முடிவு நம்பகத்தன்மையுடனும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் சித்தரிக்கப்பட்டிருப்பதோடு அந்தக் காட்சியின் அழுத்தத்தால் திரையரங்கைவிட்டு கனத்த மனதுடன் வெளியேற முடிகிறது.
வழக்கமான கமர்ஷியல் படங்களில் எதிர்பார்க்கப்படும் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இந்தப் படத்தில் இல்லை. அவை தேவையின்றி திணிக்கப்படவில்லை என்பது ஆறுதல். ஆனால் பல இடங்களில் காட்சிகள் மிகவும் மெதுவாக நகர்வதும் தேவைக்கதிகமாக நீட்டிக்கப்படுவதும் பொறுமையை சோதிக்கின்றன. அதேபோல் நாயகியை மையமாக வைத்து எழுதப்படும் கதைகள் அனைத்திலும் பேய், ஆவி போன்ற அம்சங்கள் இருக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி போலும்.
சாய் தன்ஷிகா மிகச் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். ஒரு தாயின் அன்பையும் அச்சத்தையும் சரியாக வெளிப்படுத்துகிறார். சோகத்தில் அழுது குழந்தைகள் பார்க்கும்போது அழுகையை மறைத்து சாதாரணமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ளும் காட்சிகளில் அவரது நடிப்பு குறிப்பிட்டுப் பாராட்டத்தக்கது. கதறி அழும் காட்சிகளில் அந்த சவாலை சிறப்பாகக் கையாள்கிறார்.
இரட்டைக் குழந்தைகள் வர்ணிகா, வர்ஷா இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இருவரில் வர்ணிகாவுக்கே அதிக காட்சிகள். அந்தச் சுட்டியும் எக்ஸ்பிரஷன்களிலும் வசன உச்சரிப்பிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை. அம்மாவை நினைத்து ஏங்கி அழும் காட்சியில் மனம் கனத்துவிடுகிறது.
ஒரு சில காட்சிகளில் வரும் நமோ நாராயணா முதல் பாதியில் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். மற்றவர்கள் அனைவரும் அறிமுக நடிகர்கள் என்று தெரியும் அளவுக்கு நடித்துள்ளனர்.
இளையராஜாவின் பின்னணி இசை படத்துக்குப் பெரும் பலம். எமோஷனல் காட்சிகளில் மனதை உருக்கும் இசையமைப்பதில் இன்றைய இளைஞர்களுக்கு சவால் விடுகிறார். பரபரப்பு ஏற்படுத்திய வேண்டிய காட்சிகளில் மட்டும் சற்று தடுமாறுகிறார். இரண்டு பாடல்களில் ‘வா வா மகளே’ பாடலின் இசையமைப்பும், ராஜஸ்ரீ பதக்கின் உருக்கமான குரலும் அப்பாடல் படத்தின் இடம்பெறும் இடத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. திரையரங்கைவிட்டு வெளியேறி நீண்ட நேரத்துக்குக் காதில் ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது. ‘அம்மான்னு உலகத்தில் இல்லாட்டா’ ஒரு வழக்கமான பாடலாகக் கடந்து செல்கிறது.
ஏ.குமரன் மற்றும் எஸ்.ஆர்.சந்தோஷ் குமாரின் ஒளிப்பதிவு மலேஷியாவை அதன் இயல்பான அழகுடன் வெளிப்படுத்துகிறது. விஜயகுமாரின் கலை இயக்கம் சிறப்பாக உள்ளது. ஏ.எல்.ரமேஷின் படத்தொகுப்பு படத்தை ஒரு குலுங்கள் இல்லாத பேருந்துப் பயணமாக உணரச் செய்கிறது
எத்தனை நவீன மாற்றங்கள் வந்தாலும் அம்மா என்ற உறவின் மேன்மை குறையப்போவதில்லை. அதை மிக நேர்மையுடனும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கும் படம் என்ற வகையில் ‘எங்க அம்மா ராணி’ படத்தை கட்டாயம் பார்க்கலாம்.
Comments