இந்தியர்களின் அமெரிக்க கனவை தகர்த்த அதிபர் டிரம்ப்
- IndiaGlitz, [Tuesday,January 31 2017]
இந்தியாவில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொருவரின் கனவு அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். லட்சக்கணக்கில் சம்பளம், வசதியான வாழ்க்கை ஆகியவையே இதற்கு காரணம். இதனால்தான் தினந்தோறும் அமெரிக்க தூதரகங்கள் முன் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்பதை பார்த்து வருகிறோம்.
ஆனால் தற்போது இந்தியர்களின் அமெரிக்க கனவை ஒரே ஒரு மசோதா மூலம் தகர்த்துவிட்டார் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவில் இந்தியர்கள் பணிபுரிய வேண்டுமானால் அதற்கு எச்1பி விசா அவசியம். இந்த விசா குறித்த சீர்திருத்த மசோதா இன்று அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய மசோதாவின்படி எச்1பி விசா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 60 ஆயிரம் டாலர்கள் மட்டுமே சம்பளமாக இருந்த நிலையில் தற்போது திடீரென இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் இனிமேல் வெளிநாட்டு ஊழியர்களை குறிப்பாக இந்திய ஊழியர்களை பணியமர்த்த அமெரிக்க நிறுவனங்கள் யோசிக்கும்.
மேலும் எச்1பி விசா எடுக்க கட்டணமும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் 40 கோடி டாலர் கூடுதல் சுமை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட புதிய சீர்திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டதன் காரணமாக இன்று இந்திய பங்குச்சந்தையில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. இந்தியாவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், எச்.சி.எல், டெக் மகேந்திரா, விப்ரோ, ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் ஆட்டம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.