சரண் அடைய சொல்லிவிட்டு சதி செய்துவிட்டார்கள்: மதுரை என்கவுண்டர் குறித்து உறவினர்கள் குற்றச்சாட்டு
- IndiaGlitz, [Friday,March 02 2018]
மதுரையில் நேற்று இருளாண்டி மற்றும் சகுனிகார்த்திக் ஆகிய இரண்டு ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு சுட்டு கொல்லப்பட்ட நிலையில் இது திட்டமிட்ட என்கவுண்டர் என்றும், போலீசாரே இருவரையும் சரண் அடைய சொல்லிவிட்டு பின்னர் சுட்டு கொலை செய்துவிட்டதாகவும் இருவருடைய உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து செய்திசேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சுட்டுக்கொல்லப்பட்ட இருளாண்டியின் சகோதரி சித்திரைசெல்வி என்பவர் கூறியபோது, 'போலீசார் ஆஜர்படுத்துமாறு கூறியதால்தான் இருவரையும் வீட்டுக்கு வரவழைத்தோம் என்றும் அளித்த வாக்குறுதியை மீறி இருவரையும் போலீசார் சுட்டுக்கொன்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் துப்பாக்கிச்சூடு நடந்தபின் குடும்பத்தினருக்கு போலீசார் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும் உயிரிழந்தவரின் உடல்களை பார்க்க கூட போலீசார் அனுமதிக்கவில்லை என்றும் சித்திரைச்செல்வி மேலும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மதுரையில் நேற்று நடந்த என்கவுன்டர் குறித்து தேசிய - மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு, மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் அறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் என்கவுன்டரின் போது போலீசார் பயன்படுத்திய 2 துப்பாக்கிகள் விசாரணை ஆய்வுக்காக போலிசாரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.