இந்த வாரம் வந்த இரண்டு படங்களில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வந்திருக்கும் எனக்கு வாய்த்த அடிமைகள் dark comedy என்ற ஜானரில் எடுக்கப்பட்டிருக்கிறது. புது இயக்குனர் மகேந்திரன் ராஜாமணிக்கு காமடி அதிகளவில் கை கொடுத்திருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.
கிருஷ்ணா என்கிற ஜெய் ஒரு மனநல மருத்துவரிடம் (தம்பி ராமையா) பரிசோதனைக்கு வந்து தன் காதலி திவ்யா (ப்ரணிதா) தன்னை விட்டு விட்டு வேறொருவரிடம் சென்று விட்டதால் தற்கொலை எண்ணம் வந்திருப்பதாக சொல்கிறார். தம்பி ராமையா அவனிடம் தன் உண்மையான நண்பர்களிடம் விஷயத்தை பகிர்ந்து கொள்ளும்படி ஆலோசனை சொல்கிறார். அப்படியும் மனம் மாறாத ஜெய் ஒரு ஹோட்டல் அறையில் தங்கி மதுவுடன் விஷம் கலந்து குடிக்க போகும் முன் தன் நண்பர்களான கருணாகரன், காலி வெங்கட் மற்றும் நவீனுக்கு போன் செய்ய நிச்சயதார்த்தம் நடந்துகொண்டிருக்கும் கருணாகரன் மற்றும் மற்ற இருவரும் கூட உதாசீனப்படுத்துகிறார்கள். பின் சூழ்நிலையை புரிந்து கொண்டு மூன்று நண்பர்களும் ஜெய்யை தேட ஆரம்பிக்க அவர்கள் படும் துன்பங்களும் துயரங்களும் ஒரு காமடி தர்பாராக திரையில் விரிகிறது.
சுயநலமும் அப்பாவித்தனமும் கலந்த ஒரு பக்கத்துக்கு வீடு பையன் கதாபாத்திரத்தில் ஜெய் வெளுத்து வாங்கியிருக்கிறார். பல காட்சிகளில் ஹோட்டல் அறையில் சோலோவாகவே ஸ்கோர் செய்கிறார். கிளைமாக்ஸில் மொட்டை ராஜேந்திரனிடம் அவர் அடிக்கும் லூட்டி வயிறை பதம் பார்க்கிறது. கருணாகரன் வழக்கம் போல அதிகம் அலட்டிக்கொள்ளாமல், நண்பன் தற்கொலைக்கு தான் காரணம் என்று நினைத்து பயந்து வருந்துவதாகட்டும், அவ்வப்போது காமடி சரவெடிகளை கொளுத்தி போடுவதாகட்டும் மனதை கவர்கிறார் . மொய்தீனாக வரும் காலி வெங்கட் ரணகளம் செய்கிறார். பகலில் மனைவியிடம் கொஞ்ச நினைக்க பக்கத்துக்கு வீட்டுக்காரன் அதை தன் மகனை வைத்தே கெடுப்பதில் ஆரம்பித்து கருணாகரனை பிளாக்மைல் செய்வது, நண்பர்களிடம் பேசி பேசியே டீசல் போட வைப்பது என்று கலகல என்று சென்று கடைசியில் அப்பாவியாக மொட்டை ராஜேந்திரனிடம் மாட்டி உள்ளே போவது வரை அசத்தலோ அசத்தல். இன்னொரு நண்பனாக வரும் நவீனும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மன நல மருத்துவராக வந்து ஜெய்யிடம் மாட்டி முழிக்கும் தம்பி ராமையா சிறப்பு. கிளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முன் அறிமுகமாகி கடைசியில் சிக்ஸர் அடிப்பவர் என்னமோ மொட்டை ராஜேந்திரன் தான். அவர் ஜெய்யுடன் சேர்ந்து செய்யும் அந்த ரொமான்ஸ் கலந்த சேசிங்கும் சண்டையும் தியேட்டரை சிரிப்பலையில் மூழ்கடிக்கிறது. சந்தானம் மற்றும் அஞ்சலியும் வந்து போகிறார்கள். ப்ரணிதாவுக்கு எதிர்மறை கதாநாயகி பாத்திரம் நன்றாக பொருந்துகிறது ஆனால் என்னாச்சோ தெரியவில்லை நூறு டிகிரி காய்ச்சல் வந்தவரை போலவே திரையில் தெரிகிறார். மற்ற எல்லா துணை பாத்திரங்கள் உட்பட அனைவரும் தம் பங்கை சரியாக செய்து இருக்கிறார்கள்.
சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம், இரண்டு மூன்று பாடல்கள்தான் படத்தில் எல்லாமே யாரையும் தம் அடிக்க வெளியே துரத்தாத ரகம். மகேஷ் முத்துசாமியின் காமிரா ஒகே ஆனால் கோபி கிருஷ்ணாவின் எடிட்டிங் படத்தின் ஆமை வேகத்தை எதாவது செய்து சரி செய்திருக்கலாமோ என்று தோன்ற வைக்கிறது. மஹேந்திரன் ராஜாமணியின் பெரிய பலம் எதார்த்தமான வசனங்களில் இழைந்தோடும் நகைச்சுவை, நடிகர்களிடமும் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். மற்றபடி டார்க் காமெடியை சரியாக எடுத்துக்கும், காதலுக்காக தற்கொலை செய்ய நினைக்கும் வாலிபர்களுக்கு மெசேஜ் சொன்னதுக்கும் வெகுவாக பாராட்டலாம்.
படத்தின் மிக பெரிய குறைகள் நேர்த்தி இல்லாத திரைக்கதையும், ஆமை வேக காட்சி நகருதலும் தான். இதை சரி செய்திருந்தால் 'கலகலப்பு' படம் போல் மறக்க முடியாத பட்டியலில் இணைந்திருக்கும், இயக்குனர் இதில் கோட்டை விட்டு விட்டார் என்பது வருத்தம்.
வேக குறைவு உறுத்தினாலும் அதற்க்கு மருந்தாய் வரும் குபீர் சிரிப்பு காட்சிகள் இந்த அடிமைகளை தாராளமாக ரசிக்கலாம் என்றே சொல்ல வேண்டும்
Comments