தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம் மேனனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- IndiaGlitz, [Saturday,February 25 2017]
தமிழ் சினிமாவை ஸ்டைலிஷாக மாற்றிய பெருமை பெற்ற இயக்குனர் கவுதம் மேனன் அவர்களுக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
காதல் படம் என்றாலும் ஆக்சன் படம் என்றாலும் கவுதம் மேனனுக்கே உரிய ஒரு ஸ்டைல் உண்டு. வித்தியாசமான காட்சி அமைப்பு, ஆத்திரத்திலும் அமைதியாக பேசும் ஹீரோ கேரக்டர்கள், கிட்டத்தட்ட எல்லா படத்திலும் அமெரிக்காவின் அழகான காட்சிகள், ஹீரோயினுக்கு முக்கியத்துவம், பாடல் காட்சிகளில் ரிச்னெஸ் இவையெல்லாம் கவுதம் மேனனின் ஸ்டைல்
முதல் படமான 'மின்னலே' படம் வெளிவந்ததும் யார் இந்த இயக்குனர் என்று கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்தவர். காக்க காக்க' படம் போல் ஒரு விறுவிறுப்பான போலீஸ் பிளஸ் ரொமான்ஸ் படம் இனிமேல் ஒன்று வர வாய்ப்புகள் குறைவு. சூர்யா மற்றும் ஜோதிகாவின் கெமிஸ்ட்ரியை இயல்பாக இந்த படத்தில் கவுதம் மேனன் காட்சிப்படுத்தினார். மேலும் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் இணைய காரணமாக இருந்த படம் என்ற பெருமையும் இந்த படத்திற்கு உண்டு.
இதேபோல் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான மற்றொரு போலீஸ் படமான கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', ஒவ்வொரு காட்சியிலும் திருப்பங்கள் நிறைந்த 'பச்சைக்கிளி முத்துச்சரம்', சூர்யாவின் முழு திறமையையும் வெளியே கொண்டு வந்த 'வாரணம் ஆயிரம்' போன்ற படங்கள் இன்றளவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் இமை சிமிட்டாமல் பார்க்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர்.
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மறக்க முடியாத காதல் படங்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் இடம் பெறும் ஒரு படமாக அமைந்தது 'விண்ணைத்தாண்டி வருவாயா'. சிம்புவை இவ்வளவு அமைதியாக வசனம் பேசி நடிக்க வைத்த இயக்குனர்கள் இந்த படத்திற்கு முன்பும் இல்லை, பின்பும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு சிம்புவை ரொமான்ஸ் நாயகனாக மாற்றிய பெருமை கவுதம் மேனனுக்கு உண்டு. கார்த்திக், ஜெசி கேரக்டர்களை இன்னும் நம்மால் மறக்க முடியவில்லை.
'நடுநிசி நாய்கள்', 'நீதானே என் பொன்வசந்தம்' ஆகிய படங்களில் வசூல் அளவில் சறுக்கினாலும், அதன் பின்னர் அஜித்தின் 'என்னை அறிந்தால்' பட வெற்றியின் மூலம் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தியவர் கவுதம் மேனன். இதேபோல் சமீபத்தில் வெளிவந்த 'அச்சம் என்பது மடமையடா' பட வெற்றியும் அவரது திரைக்கதை திறமையை வெளிப்படுத்திய ஒரு படம் ஆகும்
தற்போது கவுதம் மேனன் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இரண்டு படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழ் சினிமாவில் இன்னும் பல வெற்றிகளையும் விருதுகளையும் குவிக்க இந்த இனிய பிறந்த நாளில் நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.