பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை மாரடைப்பால் மரணம்

  • IndiaGlitz, [Wednesday,September 28 2016]

கோலிவுட் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இழப்பையே திரையுலகினர் இன்னும் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் நிலையில் மற்றொரு இளம் பாடலாசிரியரான அண்ணாமல் நேற்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 49
எம்.பில் படிப்பை முடித்த அண்ணாமலை பி.எச்.டி பட்டத்துக்கான முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். முன்னணி பத்திரிகையில் பணியாற்றிய இவருக்கு முதலில் தொலைக்காட்சி தொடருக்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது. சுமார் 15 தொடர்களுக்கு பாடல்கள் எழுதிய அண்ணாமலை, கடந்த 2003ஆம் ஆண்டு 'கும்மாளம்' என்ற படத்திற்காக முதன்முதலில் திரையிசை பாடல்களை எழுதினார்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தான் இசையமைக்கும் படங்களில் தொடர்ந்து அண்ணாமலைக்கு பாடல்கள் எழுத வாய்ப்பு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' படத்தில் இடம்பெற்ற 'என் உச்சி மண்டையில' மற்றும் 'வேலாயுதம்' படத்தில் இடம்பெற்ற ரத்தத்தின் ரத்தமே ஆகிய சூப்பர் ஹிட் பாடல்கள் அண்ணாமலை எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் 'பனாரஸ் பட்டுக்காரி (நினைத்தாலே இனிக்கும்), 'ஒரு சின்ன தாமரை (வேட்டைக்காரன்), உலகினில் மிக உயரம் (நான்), அன்னையின் கருவில் (ஹரிதாஸ்), இடிச்சா பச்சரிசி (உத்தமபுத்திரன்), போட்டது பத்தல மாப்ளே (சகுனி) உள்பட 100க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த பாடலாசிரியர் அண்ணாமலைக்கு சுகந்தி என்ற மனைவியும், ரித்விகா என்ற மகளும் உள்ளார்கள்.
அண்ணாமலையின் ஆத்மா சாந்தியடையவும், அவருடைய இழப்பை தாங்கிக்கொள்ளும் அளவுக்கு அவருடைய குடும்பத்தினர்களுக்கும் உறவினர்களுக்கும் மனவலிமையை கொடுக்கவும் இறைவனை வேண்டுகிறோம்.