மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு… ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் சில புதிய விதி!

  • IndiaGlitz, [Wednesday,March 24 2021]

நாடாளுமன்றத்தில் கடந்த சில மாதத்திற்கு முன்பு New wage code Bill எனும் புதிய சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தம் வரும் 1 ஆம் தேதி அமலுக்கு கொண்டு வரப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மாதச் சம்பளம் வாங்கும் நபர்களின் வருமானத்தில் பல மாற்றங்கள் வரப் போவதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சட்டம் அமலுக்கு வரும்போது அல்லாவன்ஸ் (Allowance) எனப்படும் சம்பள விகிதம் 50% மேல் இருக்கக் கூடாது. அடிப்படை சம்பள விகிதம் 50% அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். இந்தப் புதிய நடைமுறையினால் ஒருவரின் கிராஜ்விட்டியின் அளவும் மாறிவிடும்.

தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் ஒருவர் 5 ஆண்டுகள் பணிபுரிந்தால் தான் கிராஜ்விட்டி வழங்கப்படும். ஆனால் புதிதாக அமல்படுத்தப்பட இருக்கும் சட்டம் மூலமாக கிராஜ்விட்டி ஒரு வருடத்தில் கிடைத்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்ட விதியின் படி ஊழியர்களுக்கு 12% பிஎஃப் பிடித்தம் கடைப்பிடிக்கப் படுகிறது. ஆனால் இனி ஒருவரின் வருங்கால வைப்பு நிதியும் இப்புதிய சட்டத்தின் மூலம் அதிகரித்து விடும். இதனால் ஒருவரின் சம்பள பணம் குறைந்து விடும் என்பதும் நீண்ட கால பயன் அதிகமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்புதிய சட்டத்தின் மிகப்பெரிய பயனாகப் பார்க்கப்படுவது பிஎஃப் மற்றும் கிராஜ்விட்டி என இரண்டும் பார்க்கப்படுகிறது.