நம்மூர் அலுவலகத்தில் பீர் குடிக்கலாமா? புதிய விதியால் குஷியான இளைஞர்கள்!
- IndiaGlitz, [Saturday,May 20 2023]
ஹரியானாவில் இயங்கும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பீர், ஒயின் போன்ற குறைந்த ஆல்கஹால் கொண்ட மதுபானங்களை அருந்துவதற்கும் அந்த நிறுவனங்களில் உள்ள உணவகத்திலேயே இதுபோன்ற மது பானங்களை வைத்துக் கொள்வதற்கும் ஏற்ப புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டு உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
மாற்றங்கள் செய்யப்பட்ட 2023 – 2024 ஆண்டிற்கான புதிய கலால் கொள்கைகளுக்கு ஹரியாணா அமைச்சர்கள் குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து ஹரியாணாவில் இயங்கும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் L-10F உரிமம் பெற்று அலுவலகத்திலேயே பீர், ஒயின் போன்ற மதுபானங்களை அருந்துவதற்கு அனுமதி அளிக்க முடியும். அதேபோல அங்குள்ள உணவகங்களில் பீர், ஒயின் போன்ற குறைந்த அளவு ஆல்கஹால் கொண்ட மதுபானங்களை விற்பனை செய்யலாம் என்று புதிய விதி அனுமதி அளித்துள்ளது.
இதன்படி கலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையரிடம் இருந்து L-10F உரிமத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலில் பெற வேண்டும். மேலும் 1 லட்சம் சதுர அடியுடன் இயங்கும் பெரிய கார்ப்பரேட் நிறுவங்களுக்கு மட்டுமே இதுபோன்ற அனுமதி அளிக்கப்படும். அதேபோல குறைந்த பட்சம் 5,000 ஊழியர்கள் பணியாற்றும் அலுவலகமாக அது இருத்தல் வேண்டும். கூடவே நிறுவனத்தில் 2,000 அடி சதுர அடியில் உணவகம் அல்லது கேண்டீன் இயங்குவதற்கான ஏற்பாட்டினை செய்யவேண்டும் என்பதுபோன்ற விதிமுறைகள் புதிய கலால் கொள்கையில் சுட்டிக்காட்ட பட்டிருக்கிறது.
மேலும் இதுபோன்று பீர், ஒயின் அருந்துவதற்காக உரிமம் பெற இருக்கும் நிறுவனங்கள் ஆண்டுக்கு கட்டணமாக 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் அதேபோல 3 லட்சம் பாதுகாப்பு தொகையாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவலைப் பார்த்த நம்மூர் இளைஞர்கள் தமிழகத்திலும் இதுபோன்ற விதிமுறைகள் கொண்டுவர மாட்டார்களா? என்று ஏக்க பெருமூச்சுடன் கேள்வி எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.