இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட கொரோனா தடுப்பூசி! முன்னுரிமை யாருக்கு?

இந்தியாவில் அவசர கால அடிப்படையில் இன்றுமுதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு வருகிறது. இத்திட்டத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்துள்ளார். இதன் முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் என 3 கோடி பேருக்கு செலுத்தப்பட இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து உலகம் முழுவதும் வழங்க முன்வந்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை இந்தியாவிற்கே முன்னுரிமை அளித்து வழங்கும் வகையில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து உள்ளது. எனவே இத்தடுப்பூசி மற்றும் ஐத்ராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் இணைந்து தயாரித்த கோவேக்சின் கொரோனா தடுப்பூசி ஆகிய 2 தடுப்பூசிகளுக்கும் இந்தியாவின் மருத்துவத் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி ஒப்புதல் வழங்கி இருந்தார்.

இந்த ஒப்புதலை அடுத்து கடந்த 9 ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது உயர்மட்ட குழுவினருடன் இணைந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இந்தப் பேச்சுவார்தைக்குப் பின்பு கொரோனா தடுப்பூசி வரும் 16 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அந்த அறிவிப்பின் படி இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இதன் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனாவுக்கு எதிரான முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. அடுத்ததாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கு போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்கள பணியாளர்களுக்கான தடுப்பூசி போடும் செலவை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும் மருத்துவம் சாரா பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். இதற்காக தமிழகத்தில் 166 மையங்களில் 4 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுதப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.