விபத்து நடந்த ரயில் முன் செல்பி எடுத்த மீட்புப்படையினர்களுக்கு தண்டனை
- IndiaGlitz, [Wednesday,August 16 2017]
உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் முதல் வயதானவர் வரை அனைவரையும் பிடித்துள்ள ஒரு நோய் 'செல்பி'. ஆபத்தான நிலையில் செல்பி எடுப்பதன் காரணமாக பல உயிர்களும் பலியாகி வருகிறது. அதுமட்டுமின்றி மனசாட்சியே இல்லாமல் விபத்து நடந்த இடத்தில் ரத்தம் சொட்ட சொட்ட ஒருவர் இருக்கும்போது கூட அவருடன் செல்பி எடுக்கும் குரூர எண்ணம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் எகிப்து நாட்டில் சமீபத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 41 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற அனுப்பப்பட்ட மீட்புப்படையினர்களில் சிலர் விபத்துக்குள்ளான ரயிலின்முன் செல்பி எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த குற்றச்சாட்டுக்கள் புகைப்பட ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்ததால் மீட்புப்படையினர்களுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து தனது கவனத்துக்கு வந்த உடன் அந்நாட்டின் சுகாதார அமைச்சர், செல்பி எடுத்த மீட்புப்படையினர்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் செல்பி எடுத்த ஆறு நபர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.