ஸ்கெட்ச் போட்டு தூக்கும் எலான் மஸ்க்… … ChatGPT க்கு மாற்றாக XAI அறிமுகம்!
- IndiaGlitz, [Thursday,July 13 2023]
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் தொழில்நுட்பத்தைப் பற்றிய பேச்சுத்தான் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடிய ChatGPT அறிமுகப்படுத்தப் பட்டது. இதன் உருவாக்கத்தில் பெரிய பங்காற்றி பின்னர் அதிலிருந்து வெளியே வந்த எலான் மஸ்க் ChatGPT க்கு மாற்றாக XAI எனும் செயற்கை நுண்ணறிவு தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.
உலக அளவில் பெரிய பணக்காரராக இருந்துவரும் எலான் மஸ்க் ஏற்கனவே தானே இயங்கும் டெஸ்லா கார்கள், ஸ்பேஸ் எக்ஸ் நிறுனத்தின் விண்வெளி ஆராய்ச்சி, சமீபத்தில் டிவிட்டர் என்று தொழில் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியில் அசுர வேகத்தை எட்டி வருகிறார். இதைத்தவிர குரங்குகளின் மூளையில் ‘சிப்‘ பொருத்தி செயற்கை நுண்ணறிவு குறித்த மற்றொரு ஆராய்ச்சிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு குறித்த தொழில்நுட்பத்திலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இதற்காக கூகுள் மற்றும் ஓபன் ஐ நிறுவனத்துடன் இணைந்து ChatGPT தளத்தின் உருவாக்கத்தில் பெரிய பங்காற்றி இருந்தார். ஆனால் ChatGPT குறித்து பலமுறை எச்சரித்த எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு விஷயத்தில் அவசரம் காட்டக்கூடாது, அது அரசியல் ரீதியான செயல்பாடுகளில் பொறுப்பற்ற தன்மையைக் கொண்டிருக்கும் என கூறி அதிலிருந்து வெளியேறினார்.
பின்னர் செயற்கை நுண்ணறிவு துறையில் கால்பதிப்பதற்காக TruthGPT என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தையும் எலான் மஸ்க் துவங்கியிருந்தார். இந்த நிறுவனத்தில் இருந்து கொண்டே ஓபன்ஐ, கூகுள், டெஸ்லா என்று பல முன்னணி நிறுவனங்களின் வல்லுநர்களை ஒருங்கிணைத்து தற்போது XAI என்ற இணையதளத்தை அறிமுகம் செய்திருக்கிறார்.
XAI எனும் தனது புதிய செயற்கை தொழில்நுட்ப தளம் குறித்து பேசிய எலான் மஸ்க் லாப நோக்கமற்று இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் இதன் மூலம் பிரபஞ்சத்தின் உண்மையான தன்மையை புரிந்துகொள்வதுடன் வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
வரும் ஜுலை 14 முதல் பயன்பாட்டிற்கு வர இருக்கம் இந்த XAI தளத்தை டிவிட்டரின் ஸ்பேஸ் தளத்தின் மூலம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையில் ChatGPT வரவேறைப்பையும் விமர்சனங்களையும் ஒருசேர பெற்று வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனமும் சமீபத்தில் இதேபோன்று Bard- ஐ அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் எலான் மஸ்க் இவற்றிற்கு மாற்றாக இருக்கும் வகையில் XAI தளத்தை உருவாக்கி அதைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.